அம்மனக்கட்டையாக நின்று போலீசாரை மிரட்டிய திமுக பிரமுகர் ராஜதந்திரங்கள் வீணான தருணம்.. கையில் எடுத்த கடைசி ஆயுதம் சாதி..!
நாங்குநேரி அருகே மணல் திருட்டு வழக்கில் தேடப்பட்ட திமுக பிரமுகர் வீட்டின் அறையை பூட்டிக் கொண்டு, ஆடைகளை களைந்து மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் கதவை உடைத்து அவரை கைது செய்தனர். கைது செய்ய வந்த ஏ.எஸ்.பியை மறித்து திமுக பிரமுகரின் மனைவி சாதியை சொல்லி திட்டியதாக மிரட்டிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அடுத்த வெங்கட்ராயபுரம் சடையநேரி குளத்தில் கடந்த 17-ம் தேதி மணல் திருட்டில் ஈடுபட்டதாக திமுக பிரமுகர் கங்கை ஆதித்தன் என்பவர் மீது கிராம நிர்வாக அலுவலர் மகா ஹரி சந்திரன் விஜய நாராயணம் போலீசில் புகார் அளித்தார். மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி, இரு சக்கரவாகனங்கள் கைப்பற்றப்பட்டது. சாத்தான்குளத்தை சேர்ந்த கங்கை ஆதித்தனை தேடிவந்தனர்.
நீதிமன்றத்தில் அவருக்கு முன் ஜாமின் கிடைக்காத நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவரது வீட்டை போலீசார் ஏ.எஸ்.பி பிரசன்னகுமார் தலைமையில் சுற்றி வளைத்தனர். கங்கை ஆதித்தன் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு திறக்க மறுத்து அடம் பிடித்தார்.
போலீசார் கதைவை திறக்க முயன்ற போது பள்ளிச்சீறுடை அணிந்த தனது மகளை இடையில் தள்ளி கங்கை ஆதித்தனின் மனைவி போலீசாருக்கு இடையூறு செய்தார்.
வடிவேலு காமெடி காட்சியில் வருவது போல, உள்ளே வராதீங்க.. அறைக்குள் ஆடைகளை களைந்து போட்டு, நிர்வாணமாக நிற்பதாக கூறி கங்கை ஆதித்தன் மிரட்டிய நிலையில், போலீசார் அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டினர். கங்கை ஆதித்தனின் மனைவியோ , ஏ.ஏஸ்.பியை மறித்து கடும் வாக்குவாதம் செய்தார்.
மணல் திருடுவது தப்பு என்று கூறிய ஏ.எஸ்.பி , சிறுவர்களை குறுக்கே நிற்க வைத்து அவர்களின் மனதையும் கெடுக்க வேண்டாம் என்று பொறுமையாக அறிவுரை கூறினார்.
கடைசி ஆயுதமாக , போலீசார் தன்னை சாதியை சொல்லித்திட்டியதாக கூறி கங்கை ஆத்தித்தனின் மனைவி டூட்டை மாற்ற , “பொய் சொல்லாதீங்கம்மா நீங்க என்ன சாதின்னே எனக்கு தெரியாது” என்று கூறிய ஏ.எஸ்.பி தனது காரில் ஏறினார்.
அதற்குள்ளாக வீட்டிற்குள் அம்மனக்கட்டையாக நின்று அலப்பறை செய்து கொண்டிருந்த கங்கை ஆதித்தனை கைலி அணியச்செய்து போலீசார் கைது செய்து வெளியே அழைத்து வந்தனர்.
அருகில் இருந்த கங்கை ஆதித்தனின் ஆதரவாளரோ , அண்ணனை வித் அவுட்டாக போலீசார் அழைத்து செல்வதாக தவறான தகவலை தெரிவித்தார்.
Comments