பெண் மருத்துவருக்கு இன்ஸ்டா மூலம் பாலியல் தொல்லை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவர் கைது கொல்கத்தா சம்பவத்தை சுட்டிக்காட்டி மிரட்டல்!

0 1012

சென்னையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவரை கல்லூரி படிக்கும் காலத்தில் ஒருதலையாகக் காதலித்த சக மருத்துவர் ஒருவர், 9 ஆண்டுகள் கழித்து, பெண் மருத்துவரின் கணவர் மூலம் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் பல்லாவரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பெண் மருத்துவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த 2015 பேட்ஜ்ஜில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். அப்போது அவருடன் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் மருத்துவம் படித்துள்ளார்.

படிக்கும்போது இருவரும் நண்பர்களாக இருந்ததாகவும் சுரேஷ் குமார் பெண் மருத்துவரை ஒரு தலையாக காதலித்ததாகவும் கூறப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு பெண் மருத்துவருக்கு வேறொரு மருத்துவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பெண் மருத்துவரின் கணவரது இன்ஸ்டாகிராமுக்கு ஆபாச வார்த்தைகளும் ஆண் ஒருவரின் ஆடையில்லா படமும் வந்துள்ளது. பெண் மருத்துவரின் கணவர் அந்த ஐடியை பிளாக் செய்துள்ளார். இதையடுத்து அந்த நபர், பெண் மருத்துவர் மற்றும் அவரது கணவர் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை இருவரது whatsapp எண்ணிற்கு அனுப்பியதுடன், கொல்கத்தா சம்பவத்தை போன்று, பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து விடுவதாக மிரட்டி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக பெண் மருத்துவரின் கணவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் போலீசார், இன்ஸ்டாகிராம் ஐடி-யின் ஐபி முகவரியை வைத்து திருவள்ளூரிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த டாக்டர் சுரேஷ்குமாரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தாம் ஒருதலையாகக் காதலித்த பெண்ணுக்குத் திருமணம் ஆனதை அறிந்து, 9 ஆண்டுகள் கழித்து அவரைப் பழிவாங்கும் நோக்கில், அவரது கணவர் மூலமாகவே மிரட்டல் விடுத்த மருத்துவர் தனது செயலால் கம்பி எண்ணிக் கொண்டு வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments