மனைவியை விமர்சித்த மாணவனை மன்னித்த திருச்சி போலீஸ் எஸ்.பி.. - எச்சரித்து அனுப்பி வைத்தார்..!
திருச்சி எஸ்.பி வருண்குமாரின் மனைவியும், ஐ.பி.எஸ் அதிகாரியுமான வந்திதா பாண்டே குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட15 வயது பள்ளி மாணவனை போலீசார் கண்டுபிடித்த நிலையில், மாணவனின் எதிர்காலம் கருதி பெற்றோரை அழைத்த எஸ்.பி வருண்குமார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினார்.
திருச்சி எஸ்.பி வருன் குமாரின் மனைவியும் , ஐ.பி.எஸ் அதிகாரியுமான வந்திதா பாண்டே குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட 15 வயது பள்ளி மாணவனை கண்டுபிடித்த போலீசார் அவனை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். முதலில் தனக்கு தெரியாது என்று சொன்ன மாணவன், செல்போனில் உள்ள ஆதாரத்தை காட்டியதும், தான் தெரியாமல் அப்படி கருத்து பதிவிட்டதாக ஒப்புக் கொண்டார்
தொடர்ந்து திருச்சி எஸ்.பி வருண்குமாரிடம் அந்த மாணவனை அழைத்துச்சென்றனர். அவர், உனது தாய் தங்கையை இப்படித்தான் சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிடுவாயா ? என்று கேட்டார். அந்த சிறுவன் தான் இனி எப்போதும் இது போல தவறாக பதிவிட மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டான். அவனது பெற்றோரிடம் வருங்காலத்தில் இது போல தவறு செய்யாமல் இருக்க என்ன செய்ய போகிறீர்கள் ? என்று கேட்ட எஸ்.பி வருண்குமார், படிப்பில் முதல் மாணவனாக உள்ளதால் அவனது எதிர்காலம் கருதி வழக்கு பதிவு செய்யாமல் உரிய அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே தானும் தனது மனைவியும் சிறிது காலத்திற்கு எக்ஸ் வலைதளத்தில் இருந்து விலகி இருக்க போவதாக எஸ்.பி வருண்குமார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments