பழநியில் 2 நாள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை... காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 474

இரு நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் தொடங்கியது. மாநாட்டு அரங்கின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியை ஏற்றி வைத்தார்.

முத்தமிழ் முருகன் மாநாட்டை சென்னையில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் மொத்தம் 8 ஆயிரத்து 436 திருக்கோயில்களில் 3 ஆயிரத்து 776 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார். ஆலய வழிபாட்டில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் என்றும், கோயில் வளர்ச்சி மற்றும் அதில் பணிபுரிவோரின் முன்னேற்றத்திற்காக அரசு என்றும் துணை நிற்கும் என்றும் கூறினார்.

மாநாட்டையொட்டி முருகன் புகழ் பாடும் கண்காட்சியை அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். ஆதீனங்கள் உள்ளிட்ட ஆன்மீக பெரியவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். அறுபடை வீடுகளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் காட்சியமைப்புகள், வி.ஆர். தொழில்நுட்பத்தில் கோவில்களை கண்டு ரசிக்கும் வசதி உள்ளிட்டவை அதில் இடம்பெற்றன.

முத்தமிழ் முருகன் மாநாட்டின் நுழைவாயிலில் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் போன்ற தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்காக அமைக்கப்பட்ட கலையரங்கத்தில் அறுபடை முருகனின் பெருமையை போற்றும் வகையில் 3டி திரையில் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன.

முன்னதாக பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, மாநாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் முருகன் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments