கட்சி கொடியை அறிமுகம் செய்தார் த.வெ.க தலைவர் விஜய்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக் கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில், கல்வெட்டை திறந்துவைத்து, கட்சியைக் கொடியை அவர் ஏற்றிவைத்தார்.
கருஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில், இரண்டு போர் யானைகளுக்கு நடுவில் வெற்றியைக் குறிக்கும் வாகைப்பூ இடம்பெற்றிருக்கும் கொடியை விஜய் அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் த.வெ.க கட்சியின் உறுதிமொழியை நெஞ்சில் கை வைத்தபடி விஜய் வாசிக்க, அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.
தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது என்ற பாடல் வரிகளுடன் தொடங்கும் கொடிப் பாடலையும் விஜய் வெளியிட்டார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களாகிய தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் முன் கட்சிக் கொடி அறிமுகத்தை பெருமையாகக் கருதுவதாக விஜய் உரை நிகழ்த்தினார்.
கட்சிக் கொடியின் பின்னால் வரலாற்று குறிப்பு உள்ளதாகவும், அதைப்பற்றி கட்சியின் கொள்கை மற்றும் செயல் திட்டங்கள் குறித்து பின்னர் நடைபெறும் நிகழ்ச்சியில் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் விஜய். விழாவில் பங்கேற்ற தனது பெற்றோருக்கு நன்றி தெரிவிப்பதாக விஜய் கூறினார்.
Comments