வீட்டின் முன்பு சடலம் எரிப்பு கைவிட்ட கணவன் வீட்டில் கட்டையோடு எரித்த உறவினர்கள் திகிலூட்டும் பீதியில் கிராம மக்கள்

0 1371

தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சடலத்தை கணவர் வீட்டின் முன்பு கட்டையை அடுக்கி வைத்து எரித்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன்விடுதி மக்களிடையே திகிலை ஏற்படுத்தி உள்ளது.

திறந்திருக்கும் வீட்டின் முன்பு எரிந்து கொண்டிருக்கும் தீ யாகத்திற்கானது அல்ல, தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சடலத்தை கும்பல் ஒன்று எரித்ததால் ஏற்பட்ட குலை நடுங்க வைத்த சம்பவத்தின் தீயே அது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் அதே ஊரைச் சேர்ந்த தாய்மாமன் மகனாகிய பழனிராஜ் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

சில மாதங்களிலேயே புவனேஸ்வரியை பிரிந்த பழனிராஜ், அதே ஊரைச் சேர்ந்த பிரபாவை திருமணம் செய்து கொண்டு நாகர்கோவிலுக்கு இடம் பெயர்ந்தார். தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் திருமணத்திற்கு பிறகு அவர்கள் ஊர் திரும்பவில்லை என கூறப்படுகிறது.

கணவன் கைவிட்டதால் தாய் வீட்டில் வசித்து வந்த புவனேஸ்வரிக்கு கடந்தாண்டில் இறந்த அவரது தந்தையின் இழப்பு மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படும் புவனேஸ்வரி வீட்டினருகே இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர், உடற்கூராய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிந்த பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலை ஊருக்குக் கொண்டு வந்த அவரது உறவினர்கள் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லாமல் நேரடியாக பழனிராஜ் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு பழனிராஜின் வயதான தாய்-தந்தையர் மட்டுமே இருந்த நிலையில் வீட்டின் முன்பாக உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

டிராக்டர் நிறைய மரக்கட்டைகளை எடுத்து வந்து வீட்டின் முன்பாக கொட்டிய அந்த கும்பலை பழனிராஜின் பெற்றோர் தடுத்த போது அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறவே வீட்டின் வாசலுக்கு முன்பே கட்டையில் சடலத்தை கிடத்தி சிதை மூட்டி எரித்தது அந்த கும்பல்.

மனைவியை விட்டு விட்டு வேறொரு பெண்ணை தேடிச் செல்லக் கூடாது என மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இவ்வாறு வீட்டின் முன்பு சடலத்தை எரியூட்டியதாக பெண்ணின் தரப்பினர் தெரிவித்தனர்.

குடும்ப தகராறு காரணமாக பெண் சடலத்தை அவரது முன்னாள் கணவர் வீட்டின் முன்பு வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியினரிடையே ஒருவித திகிலை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments