விழுப்புரத்தில் வீட்டுமனை பதிவிற்கு என்.ஓ.சி வழங்க லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது
வீட்டுமனை பதிவிற்கு என்.ஓ.சி வழங்க ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சேட்டு என்பவர் திருவெண்ணைநல்லூர் பகுதியில் சில வீட்டு மனைகளுக்கு பத்திரபதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார்.
அங்கு திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் மேற்கண்ட நிலத்தினை பதிவு செய்யாதவாறு தடை மனு கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சேட்டு செயல் அலுவலரிடம் கேட்டபோது நீங்கள் மனையினை அரசிடம் பணம் கட்டி வரன்முறை செய்திருந்தாலும், தனக்கு கொடுக்க வேண்டிய லஞ்சத்தை கொடுத்தால் தடையின்மை சான்று வழங்குவதாக கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக சேட்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை சேட்டுவிடம் கொடுத்தனர்.
அந்த பணத்தை செயல் அலுவலர் முருகனிடம் வழங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகனை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.
Comments