பார்ப்பிக்யூ சிக்கனில் கண்ணாடி துண்டுகள் வந்தது ஏப்படி ? வாயில் ரத்தத்துடன் வந்து புகார்..! இவ்வளவு கவனக்குறைவா ? அதிகாரி

0 811

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆசிப் ஓட்டலில் இருந்து வீட்டுக்கு பார்சல் வாங்கிச்சென்ற பார்ப்பிக்யூ சிக்கனில் கண்ணாடித் துண்டுகள் கிடந்ததாக புகார் அளித்ததன் எதிரொலியாக ஓட்டலில் ஆய்வு நடத்திய அதிகாரி கெட்டுப்போன சிக்கன், மசாலா பொருட்களை கைப்பற்றி குப்பையில் கொட்டினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை சாலையில் செயல்படும் பிரபலமான ஆசிப் பிரியாணி ஹோட்டலில் முகமது பாரித் என்பவர், குழந்தைகளுக்காக பெப்பர் பார்பிக்யூ சிக்கன் வாங்கி உள்ளார்.

இந்த சிக்கன் உள்ளே உடைந்த கண்ணாடி துண்டுகள் ஏராளமாக கிடந்துள்ளன. இது தெரியாமல் சாப்பிட்டதால் வாயில் ரத்தம் கசிந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேரடியாக ஓட்டலுக்குச் சென்று விசாரித்தார்.

தண்ணீர் இருந்த கண்ணாடி பாட்டில் சமையலறையில் விழுந்து உடைந்ததாகவும், மசாலா பாத்திரத்திற்குள் கண்ணாடி துண்டுகள் விழுந்ததை பார்க்காமல், அப்படியே சிக்கனில் தோய்த்து அதனை பொறித்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. தங்களின் செயலுக்கு ஓட்டல் நிர்வாகம் மன்னிப்புக் கேட்டது.

ஓட்டல் நிர்வாகத்தின் விளக்கத்தை ஏற்க மறுத்து, குழந்தைகளின் உயிருடன் விளையாடும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பாரித் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் ஆசீப் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார்.

சமையலறை, உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள பகுதி, பால் குளிர்பதன பெட்டி, முன்பே தயாரித்து மசாலா பதப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் கெட்டுப்போன பிரியாணியுடன் கூடிய 6 கிலோ சிக்கன், 2 கிலோ நாள்பட்ட மசாலாப் பொருட்கள், கெட்டுப்போன 50 அவித்த முட்டைகள் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டன.

மேலும் கத்தரிக்காய் கிரேவி, சமையல் எண்ணெய், மசாலா என 5 உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வக பரிசோதனைக்காக எடுத்துச் சென்றார்.

மேலும் சிக்கனில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவத்திற்காக மேல் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments