மலையில் காளான் தேடிய எம்.பி.ஏ பட்டதாரிகள்.. பைனலாக காத்திருந்த டுவிஸ்ட்..! கொடைக்கானலில் இதை செய்யாதீங்க..!
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் இன்ஸ்டாகிராமை பார்த்து மலையில் மேஜிக் மஸ்ரூம் என்று அழைக்கப்படும் போதைக்காளானை சேகரித்த எம்.பி.ஏ பட்டதாரிகள் உள்ளிட்ட 15 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கொடைக்கானலுக்கு போயி... போதைக்காளானில் இப்படி தேனை ஊற்றி பிசைந்து சாப்பிட்டா.... கவலையே படாதீங்க... உங்களை போலீஸ் வந்து பிடிச்சுட்டு போயிடும் என்று தரமாக எச்சரித்துள்ளார் காவல் துணைக் கண்காணிப்பாளர் மதுமதி..!
சுற்றுலாப் பிரியர்களின் விருப்பத் தேர்வான கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சிலர் வெளியிடும் மேஜிக் மஸ்ரூம் பதிவை பார்த்து வெளிமாநில இளசுகள் பலர் மலைகிராமங்களில் உள்ள தனியார் டெண்ட்கள் மற்றும் தங்குவிடுதிகளை தேடிச்செல்வது வழக்கமாக மாறி வருகின்றது.
இதையடுத்து மன்னவனூர், ஏரிச்சாலை,பாம்பார் புரம், பேரிபால்ஸ் மேல்மலை கிராமங்களில் உள்ள டென்ட் கூடாரம், டூம்ஹவுஸ், ஏ பிரேம் உள்ளிட்ட விடுதிகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட போலீசார் போதைக் காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர்.
போதைக்காளானை விற்றதாக மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி, கல்லறை மேடு பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், பாம்பார்புரம், பேரிபால்ஸ் பகுதியைச் சேர்ந்த மணி ஆகியோரை கைது செய்தனர். கொடைக்கானல் பெர்ன்ஹில் பகுதியில் னேரடியாக களமிறங்கி போதை காளான்களை தேடிச்சென்று பறித்து கொண்டிருந்த மதுரை மேலூரை சேர்ந்த சூர்யா, ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் ஆகிய எம்.பி.ஏ பட்டதாரிகளையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சோதனையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்களும் சிக்கினர். 500 கிராமுக்கும் அதிகமான போதைக்காளான்களையும் கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போதைக்காளான் குறித்து விளம்பரப்படுத்தும் நபர்கள் குறித்து விசாரித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் மதுமதி எச்சரித்துள்ளார்.
Comments