ஓடும் ரயிலில் செல்போன்பறிப்பு.. வலது காலை இழந்த வடமாநில இளைஞர்.. கஞ்சா போதை ஆசாமிகளின் அட்டகாசம்..!

0 931

சென்னை கொருக்குப்பேட்டை அருகே சிக்னலுக்காக வேகம் குறைக்கப்பட்ட விரைவு ரயிலில் கதவோரம் நின்றுகொண்டிருந்த வெளிமாநில இளைஞரிடம் கஞ்சா போதை ஆசாமிகள் செல்போன் பறிக்க முயன்றபோது, அந்த இளைஞர் கீழே விழுந்து அவரது வலது கால் துண்டானது.

கேரளாவில் வேலை செய்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த கிரண்குமார் என்ற இளைஞர், விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று ஷாலிமார் விரைவு ரயிலில் மீண்டும் கேரளா திரும்பிக் கொண்டிருந்தார். சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்னை கொருக்குப்பேட்டையைக் கடந்தபோது, சிக்னலுக்காக ரயில் மெதுவாக இயக்கப்பட்டுள்ளது. தூக்கம் கலைந்து ரயில் பெட்டியின் கதவோரம் செல்போன் பார்த்துக் கொண்டு நின்றிருந்த கிரண்குமாரின்கையிலிருந்த செல்போனை இருட்டில் ஒரு உருவம் பறிக்க முயன்றுள்ளது. அப்போது நடந்த போராட்டத்தில் நிலைதடுமாறி விழுந்த கிரண்குமாரின் வலது கால் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான நிலையில், இடது கால் பாதமும் நசுங்கி சேதமடைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கிரண்குமாரின் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய நபரோடு, மேலும் இருவர் ஓடுவதைக் கண்ட சக ரயில் பயணிகள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் விழுந்து கிடந்த ஒரு செல்போனை ஆய்வு செய்தபோது, அது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவருடையது என்பது தெரியவந்தது. போலீசார் கையில் செல்போன் கிடைத்துவிட்டதை அறிந்த சுந்தரேசன், எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். செல்போன் பறிப்பின்போது அவனுடன் இருந்த கூட்டாளிகளில் ஒருவனான யுவராஜ் என்பவன் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே போலிசிடம் சிக்கினான். அவனிடம் விசாரித்தபோது கஞ்சா வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்டது சுந்தரேசன் தான் எனக் கூறியுள்ளான். மற்றொரு நபரான ஹரிபாபு என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.

மின்சார ரயில், விரைவு ரயில் உள்ளிட்டவற்றில் பயணிப்பவர்கள், படியில் அமர்ந்துகொண்டோ, நின்றுகொண்டோ செல்போன் பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என ரயில்வே போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments