அத்திக்கடவு-அவினாசி திட்டம் - 60 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்..

0 641

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் வறட்சியான பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனால் விவசாயிகளின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது.

ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக அத்திக்கடவு- அவினாசி திட்டம் இருந்து வந்தது. கடந்த 2018ம் ஆண்டு 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது ஆயிரத்து 916 கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டுவதற்காக, 1,065 கிலோ மீட்டர் நீளத்துக்கு நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நீரேற்று நிலையத்திலும், 8 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், ஆறு மோட்டார்கள் இயக்கப்பட்டு, தண்ணீர் 'பம்ப்' செய்யப்படும். இரு மோட்டார்கள், மாற்று மோட்டார்கள் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக்கல் ஆட்டோ மெஷின் மற்றும் குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ்., ஆகியவை இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. உலகின் சிறந்த 'அப்டேட்' தொழில்நுட்ப உபரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குழாய் பதிக்கப்பட்டுள்ள, 1,065 கிலோ மீட்டர், தொலைவில், ஐந்து இடங்களில் ரயில்வே தண்டவாளத்தை கடந்தும், ஐந்து இடங்களில் நெடுஞ்சாலையை கடந்தும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

1957ஆம் ஆண்டு அத்திக்கடவு - அவிநாசி கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது முதலே, பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை வலியுறுத்தி பேசினாலும், நீண்ட காலமாக திட்டம் முடங்கியிருந்தது. 1972ஆம் ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த கொள்கை முடிவெடுக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் திட்டம் தொடர்பான விரிவான ஆய்வு மேற்கொள்ள, அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

2014ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் திட்டம் நிறைவேறும்' என்று உறுதியளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், 2018ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த உத்தரவிட்டார்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

2022ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.

1,652 கோடி ரூபாயில் துவங்கிய அத்திக்கடவு-அவிநாசி திட்டம், தற்போது 1,916 கோடி ரூபாயில் நிறைவு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு திட்டத்தில் அத்திக்கடவு என்ற பெயர் இருந்தாலும், அந்த ஊருக்கும் இந்த திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அத்திக்கடவு என்ற கிராமம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது. ஆரம்பத்தில், இந்த கிராமத்தில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்ய வேண்டும் என்பது திட்டத்தின் கோரிக்கையாக இருந்தது.
ஆனால், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிருப்தி வரும் என்ற காரணத்தால், அத்திக்கடவில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்துக்கான நீரேற்று நிலையம், ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் அணைக்கட்டுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு, மேற்கு நோக்கி கொண்டு வரப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments