சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு? மருத்துவமனைக்கு "செக்" வைத்த சுகாதாரத்துறை!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி துர்கா மருத்துவமனையில் கருக்கலைப்பின்போது கலைமணி என்ற பெண் உயிரிழந்ததாகக புகார் எழுந்ததை அடுத்து, அம்மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் அங்கீகாரம், குடும்பக் கட்டுப்பாட்டு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மஞ்சு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரிமளேஸ்வரன் - கலைமணி தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கலைமணி மீண்டும் கருவுற்றிருக்கிறார். பரிமளேஸ்வரன் சில மாதங்களுக்கு முன் வேலைக்காக வெளிநாடு சென்றதாகக் கூறப்படும் நிலையில், கருவில் உள்ளது மீண்டும் பெண்ணாக இருந்துவிடுமோ என பயந்த கலைமணி, பொன்னமராவதியுள்ள துர்கா மருத்துவமனையை அணுகி குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் செய்துள்ளார். அதில் பெண் குழந்தை என்பது தெரியவரவே, அங்கேயே கருக்கலைப்பு செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. கருக்கலைப்பு சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக கலைமணி உயிரிழந்தார்.
கலைமணி தங்களுக்குத் தெரியாமல் தனது தோழியுடன் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் மருத்துவர்கள் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் கருவைக் கலைக்க முயன்று அவர் இறந்ததாகவும் குற்றம்சாட்டும் உறவினர்கள், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர். இதனையடுத்து, மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை சார்பில் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் முறையான ஆவணங்களைப் பராமரிக்கவில்லை எனக் கூறி மருத்துவமனையின் ஸ்கேன் அறைக்கு சீல் வைத்ததுடன், மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments