சிறுமி உயிரிழப்புக்கு dailee குளிர்பானம் காரணமா..? அமைச்சர் மா.சு அதிரடி உத்தரவு
பெட்டிக்கடைகளில் விற்கும் 10 ரூபாய் மாம்பழ நிறமி குளிர்பானத்தை வாங்கிக்குடித்த 6 வயதுச் சிறுமி, வாயில் நுரைதள்ளி பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த குளிர்பானத்தை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டம் கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும் காவியா ஸ்ரீ என்ற 6 வயது மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும், அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மகன் ரித்திஷ் நான்காம் வகுப்பும் மகள் காவியாஸ்ரீ ஒன்றாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.
சனிக்கிழமை காவியாஸ்ரீ மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளிய நிலையில் சிறுமி மயங்கி விழுந்த நிலையில், இதனைக் கண்ட பெற்றோர் காவியாஸ்ரீயை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குழந்தை காவியாஸ்ரீ உயிரிழந்ததால் பெற்றோர் கதறி அழுதனர். தந்தை ராஜ்குமார் அளித்த தகவலின் பேரில் தூசி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தனது மகள், அருகில் உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் மலிவு குளிர்பானம் வாங்கி குடித்ததாலேயே இறந்ததாகவும், அந்த பாட்டிலில் தயாரிப்பு தேதி காலாவதி தேதிகள் எதுவும் அச்சிடப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டிய தந்தை ராஜ்குமார், இதுபோன்று வேறு எந்த குழந்தைக்கும் நேராத வண்ணம் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்
இதுகுறித்து உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பிறகே குளிர்பானத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட குளிர்பான பாட்டில்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதாகவும், ஆய்வு முடிவுகளைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பொதுவாகவே சிறுவர், சிறுமியருக்கு குளிர்பானங்கள் வாங்கிக் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், முற்றிலும் ரசாயண சுவையூட்டி, நிறமிகளால் உருவாக்கப்படும் மாம்பழ குளிர்பானங்கள் காலாவதியானால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும் என்றும், சிலருக்கு இளம்வயதில் புற்றுநோய், சர்க்கரை நோய், எலும்பு சிதைவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். கூடுமானவரை பழச்சாறு, லஸ்ஸி, மோர், இளநீர் போன்றவற்றை குழந்தைகள் பருகலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
Comments