சொல்லால் அடித்த ரூபிணி.. தாய்மாமன் சீதனத்தை திருப்பிக் கொடுத்து அக்கா ஆவேசம்

0 1009

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தாய்மாமன் சீர்செய்ததால் தனது கணவர் கடனாளியாகி விட்டதாக தம்பி மனைவி திட்டியதால் ஆத்திரம் அடைந்த சகோதரி, 2 வருடம் கழித்து ஊராரையும், உறவினர்களையும் ஊர்வலமாக அழைத்துச் சென்று சீர்வரிசையை திருப்பி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்மாமன் சீர் கொடுத்ததை சொல்லிக்காட்டிய தம்பி மனைவிக்கு சீரை திருப்பிக் கொடுத்த காட்சிகள் தான் இவை..

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கீழ் நெடுங்கல் காலனியைச் சேர்ந்தவர் மீனா. கணவர் சுப்பிரமணி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் . இந்த நிலையில் கைம்பெண் மீனா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் வினிதா வுக்கு கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து எளிய முறையில் மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தினார்.

அப்போது மீனாவின் தம்பி சரவணன் தாய்மாமன் சீதனமாக , புத்தாடை, பழங்கள், பாய், தலையணை, தட்டு, உட்பட 2500 ரூபாய் ரொக்கத்துடன் சீர்வரிசைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழங்கியதாக கூறப்படுகின்றது.

அதன்பின்னர் சரவணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செலவு செய்ததால் தான் தனது வீட்டுக்காரர் கடனாளி ஆனதாக, சரவணனின் மனைவி ஊர் மக்களிடம் குறை கூறி வந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் மஞ்சள் நீராட்டு விழாவில் வழங்கிய சீதனத்தையும் பணத்தையும் திருப்பி கொடு என்று மீனாவிடம் , ரூபினி தொடர்ந்து வற்புறுத்தி சண்டையிட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மீனா அவரது மகள் மஞ்சள் நீராட்டு விழாவின் போது தாய்மாமன் சீர்வரிசையாக தம்பி சரவணன் வழங்கிய பொருட்கள் மற்றும் பணம் திருப்பி தர முடிவு செய்தார்

பழங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடை, தட்டு , மற்றும் ரொக்கம் 2500 ரூபாய் உட்பட சீர்வரிசையை உறவினர்களுடன் எடுத்துச் சென்று ரூபினி வீட்டு வாசலில் வைத்தார். "மானங்கெட்ட தாய்மாமன் சீதனத்தை நீயே எடுத்துக்க," என்று ரூபினிக்கு பதில் அடி கொடுத்தார்.

தாய்மாமன் சீர்வரிசையை சகோதரி திருப்பிக் கொடுத்த இச் சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments