வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு.. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்..!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் ஹெலிகாப்டரில் சென்றார்.
நிலச்சரிவு சேத விவரங்களை பிரதமருக்கு கேரள ஏடிஜிபி அஜித் குமார் விளக்கினார். கடும் பாதிப்புக்கு உள்ளான சூரல்மலையில் ஆய்வு செய்த பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோரும் பங்கேற்றனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக சூரல்மலையில் ராணுவம் உருவாக்கிய தற்காலிக பாலத்தில், கேரள முதல்வருடன் நடந்து சென்று பிரதமர் பார்வையிட்டார்.
நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்த பிரதமர், பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.
கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மேலும் பலர் காணாமல் போயினர்.
Comments