ஆம்ஸ்ட்ராங் கொலையில் வேலூர் சிறை ஆயுள் கைதி சிறைக்குள் இருந்தே ஸ்கெட்ச் ? அடுத்தடுத்து சிக்கப்போகும் தலைகள்

0 791

வேலூர் சிறையில் இருந்தபடியே கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 23வது நபராக ஆயுள்கைதியான பிரபல ரவுடி நாகேந்திரனை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்ததாக அறிவித்துள்ளனர்

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பொன்னை பாலு, வழக்கறிஞர்கள் அருள், மலர்க்கொடி, ஹரிஹரன், ஹரிதரன், அஸ்வத்தாமன் , பெண் தாதா அஞ்சலை உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 23வது நபராக வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனை போலீசார் கைது செய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

1997 ஆம் ஆண்டு அதிமுக வட்ட செயலாளர் ஸ்டாலின் சண்முகம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 1999 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரன் தற்போது வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக உள்ளார். இவரது மகனும் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மூலமாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாகேந்திரனை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குறிப்பாக குட்செட் ஏலம் எடுப்பது, நில அபகரிப்பு, ரியல் எஸ்டேட் தொழில் கட்டப்பஞ்சாயத்து, சரக்கு முனையங்கள் மாமூல், தொழில் நிறுவனங்களில் இரும்பு உதிரி பாகங்களை ஒப்பந்தம் எடுப்பது என அனைத்திலும் நாகேந்திரனின் ஆக்டோபஸ் கரம் நீண்டதாக கூறும் போலீசார், அந்தவகையில் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பஞ்சாயத்தில் ஆம்ஸ்ட்ராங்குடன் உண்டான மோதலால், தனது மகன் அஸ்வத்தாமனுக்காக, சிறையில் இருந்தே நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைகோர்த்ததாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய குடியரசு கட்சி பிரமுகர் வி.என்.பாளையம் கொலைக்கும், 2016 ஆம் ஆண்டு ஜனநாயக புரட்சி முன்னணி என்ற அமைப்பை நடத்தி வந்த வழக்கறிஞர் ரவி கொலைக்கும், 2018 ஆம் ஆண்டு புழல் சிறையில் ரவுடி பாக்ஸர் முரளி அலுமினிய தட்டால் அந்தரங்க உறுப்பு அறுத்துக் கொல்லப்பட்ட வழக்கிலும் நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக போலீசார் கூறினாலும், அதில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் தங்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதமே கொலைக்கு காரணம் என்றதால் நாகேந்திரன் அந்த வழக்குகளில் சேர்க்கப்படவில்லை என்கின்றனர் போலீசார்.

அதே நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு எதிரான மன நிலையில் இருப்பவர்கள் யார் ?என்பதை அறிந்து, ஆற்காடு சுரேஷ் டீம், சம்போ செந்தில் டீம், சீசிங் ராஜா டீம் , என அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த கொலையை அரங்கேற்றியதில் நகேந்திரனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் அவரை கைது செய்வதற்கான வாரண்டை வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனிடம் வழங்கி கையெழுத்திட சொன்னதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் வாரண்ட் உத்தரவை அவர் இருக்கும் சிறைக்கு வெளியே ஒட்டியதோடு, சிறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்று வந்ததாக தெரிவித்தனர்.

இதற்கிடையே நாகேந்திரன் மற்றும் சம்போ செந்திலின் வழக்கறிஞராக கடந்த காலங்களில் வாதாடிய பா.ஜ.க பிரமுகர் பால் கனகராஜிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக விசாரணை நேரம் நீண்டு கொண்டே சென்றதால் அங்கு ஏராளமான வழக்கறிஞர் திரண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments