வெடித்த போராட்டம்... வெளியேறிய ஷேக் ஹசீனா! வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி! ஹசீனா தஞ்சமடைவது எங்கே? அமைதி திரும்புமா?

0 749

வங்கதேசத்தில் திடீர் திருப்பமாக, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அந்நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

வங்கதேசத்தில் அரசு பணிகளில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 % ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் வெடித்த போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்நாட்டு உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த இடஒதுக்கீட்டை 5 சதவிதமாக குறைத்ததால் கடந்த 2 வாரங்களாக அங்கு அமைதி நிலவியது. ஆனால், போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என ஷேக் ஹசீனா கூறியதால், ஞாயிறன்று டாக்காவில் பெரும் வன்முறை, தீவைப்பு சம்பவங்களில் 13 போலீசார் உட்பட 98 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு செல்ஃபோன் சேவை முடக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் இல்லம் அமைந்துள்ள வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் புகுந்ததால், ஷேக் ஹசீனா ராணுவ ஹெலிகாப்டரில் தனது சகோதரியுடன் தப்பினார். பிரதமர் அலுவலகத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள், ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச விடுதலைக்கு வித்திட்டவருமான முஜிபுர் ரகுமானின் சிலையையும் சேதப்படுத்தினர்.

திடீரென ஏற்பட்ட அசாதாரண நிலையால், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அந்நாட்டு ராணுவத் தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவித்தார். வன்முறையை கைவிட்டு இடைக்கால அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என போராட்டக்காரர்களுக்கு ராணுவத் தளபதி வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக வங்கதேசத்தை ஆட்சி செய்து வந்த ஷேக் ஹசீனா, திரிபுரா மாநிலம் அகர்தலா வந்தடைந்ததாகவும், லண்டனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய செய்தி வெளியானதும் டாக்கா நகர வீதிகளில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments