வயநாட்டில் கடும் நிலச்சரிவு மண்ணில் புதைந்த கிராமங்கள் மீட்பு பணியில் முப்படை வீரர்கள்

0 1323

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய முக்கிய பகுதிகளை சுற்றி 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்ததாக கூறப்படுவதால் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.....

இயற்கை எழில் சூழ்ந்த பல பகுதிகளை கேரளா கொண்டிருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டும் பகுதி வயநாடு. இங்கு சுற்றுலாப் பயணிகளை நம்பி ஏராளமான வணிக நிறுவனங்களும், தனியார் விடுதிகளும் உள்ளன. இந்நிலையில், வயநாட்டில் பருவ மழை பெய்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் முண்டக்கை என்னும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதி கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டதால் அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள், விடுதிகள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

பின்னர் அதிகாலை 4.10 மணியளவில் மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, அதன் அருகே உள்ள சூரல்மலையில் உள்ள குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் மண்ணுக்குள் புதைந்தன. அதேபோல், சுற்றுலா விடுதிகள் அதிகம் கொண்ட மேப்பாடி, வெள்ளர்மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த கோர நிலச்சரிவாலும், காட்டாற்று வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்த பல குடியிருப்புகளில் சிக்கி இன்னும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த நிலச்சரிவினால் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது.

சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் அங்காங்கே சிதறிக்கிடக்கும் மனித சடலங்ளையும், உடற்பாகங்களையும் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படையும் களமிறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபடுகிறது. காட்டாற்று வெள்ளத்தை கடந்து மீட்புக்குழுவினரால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள முண்டக்கை பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் மாலைக்கு பிறகே அப்பகுதியில் ராணுவம் ஹெலிகாப்டரில் தரையிறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டது.

தொடர் மழையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கயிறுகளை கட்டி காட்டாற்று வெள்ளத்தை கடந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். தனித்தீவுகளாக துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உயிருடன் எஞ்சியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

நிலச்சரிவின்போது உருண்டு வந்த பெரும் பாறைகளால் முண்டக்கை பகுதி உருக்குலைந்திருப்பதாகவும், பாறைகளில் சிக்கி அப்பகுதியில் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததாகவும் ராணுவம் தரப்பில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முண்டக்கையில் ட்ரீவில்லி எனும் ரிசார்ட்டில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் உள்பட பலர் மாயமானதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், வெள்ளரிமலை என்ற பகுதியில் பள்ளிக்கட்டிடம் ஒன்று இருந்த இடமே தெரியாமல் மண்ணுக்கு கீழே புதைந்து விட்டதாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பாறைகளும், கட்டிடங்களும் 6 கிலோ மீட்டர் தூரம் வரை அடித்து வரப்பட்டுள்ளதாகவும் மீட்புக்குழுவினரால் கூறப்படுகிறது.

48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது இத்தகையை பாதிப்புக்கு முக்கிய காரணம் என தெரிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இதுவரை கேரளா சந்தித்திடாத பேரழிவு என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments