சாலையில் பரிதவித்தவர்களை கொடூரமாக தாக்கிய கும்பல்.. திமுக பிரமுகர் மீது புகார்..! அநியாயத்தை கேட்க நாதியில்லையா ? என கதறல்

0 933

பெங்களூருவில் இருந்து குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து விட்டு, ஊர் திரும்பிய போது,  கார் பழுதானதால் கிருஷ்ணகிரி அருகே சாலையில் தவித்து நின்றவர்களிடம் வம்பு செய்து தாக்கியதாக திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

கார் பழுதாகி சாலையில் தவித்து நின்றவர்களிடம் வம்பிழுத்து, காரை உடைத்து மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய காட்சிகள் தான் இவை..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை பூர்வீகமாக கொண்ட பாக்கியராஜ் குடும்பத்தினர். பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். பரமனந்தல் கிராமத்தில் உள்ள தங்கள் குலதெய்வமான புதூர் மாரியம்மன் கோவில் விழாவுக்கு வந்து விட்டு வாடகை காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த தொகரப்பள்ளி காப்பு காட்டில் பழுதானது.

காரை சாலையோரம் நிறுத்தி விட்டு பாக்யராஜ் குடும்பத்தினர் சாலையில் தவித்து நின்றனர். கார் ஓட்டுனர் காரை சரி செய்யும் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

சாலையோரம் பெண்கள் நிற்பதை பார்த்து அந்தவழியாக மற்றொரு காரில் வந்த உள்ளூர் பிரமுகர் ஒருவர், தனது காரை நிறுத்தி பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் பாக்யராஜுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதையடுத்து அடைவாங்கிச்சென்ற அந்த நபர் ஊருக்குள் சென்று, தனது ஆதரவாளர்களை அழைத்து வந்து பாக்யராஜ் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது

கார் பழுதாகி நிற்பதாக கூறியும் கேட்காமல் காரை கிளப்பச் சொல்லி கார் ஓட்டுனரை சரமாரியாக தாக்கியதால் அவர் எங்கு ஓடினார் என்பதே தெரியவில்லை என்று தெரிவித்த பாக்யராஜ், தங்களது புகார் மீது போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்

பெண்கள் என்றும் சிறு குழந்தைகள் என்றும் பாராமல் தங்களை எல்லோரும் சூழ்ந்து கொண்டு தாக்கியதாக பாக்யராஜின் மனைவி தெரிவித்தார்

இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவத்தில் பாக்கியராஜ் தாக்கியதில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி திமுக ஒன்றிய செயலாளர் அறிஞர் என்பவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்,

அவரும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து தான் தங்களை தாக்கியதாக பாக்கியராஜ் புகார் அளித்துள்ளார். இரு தரப்பிலும் புகார்களை பெற்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments