ஆறுமாசமா என்ன பேசுனீங்க..? ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ரூட்டு.. எங்கிருந்து வந்தது ஸ்கெட்ச்..? உடைந்த சிம்கார்டுகளின் ரகசியம் சிக்குமா?
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு தொடர்பாக கைதானவர்கள் கடந்த 6 மாதமாக யார் யாரிடம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர் என்பதை அறிய , அவர்கள் பயன் படுத்திவிட்டு உடைத்து போட்ட சிம்கார்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொன்னை பாலு, ராமு , வழக்கறிஞர்கள் அருள், ஹரிஹரன் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறனர்.
இவர்களில் வழக்கறிஞர் அருளை தனியாக பெரம்பூர், புழல் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை தொடர்பாக தகவல்களை கூட்டாளிகளுக்குள் பறிமாறிக் கொள்வதற்காக பயன்படுத்திய 6 செல்போன்களை , அருள் கடம்பத்தூரை சேர்ந்த நண்பரான வழக்கறிஞர் ஹரிதரனிடம் கொடுத்ததாகவும், அதனை அவர் வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் உடைத்து வீசியதையும் போலீசார் கண்டு பிடித்தனர். மீட்கப்பட்ட செல்போன் பாகங்களை வைத்து அதில் பயன்படுத்தப்பட்ட 6 செல்போன் நம்பர்களை போலீசார் கண்டறிந்தனர்.
அந்த செல்போன்களில் பயன்படுத்தப்பட்ட 6 சிம்கார்டுகளில் இருந்து கடந்த 6 மாதங்களில் யார் யாரிடம் பேசி உள்ளனர் ? என்பன போன்ற விவரங்களை சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு நிறுவனங்களிடம் கேட்டுப் பெற்றுள்ளனர். அதில் கடந்த 3 மாதங்களில் அந்த நம்பர்களில் இருந்து அருள் மற்றும் கூட்டாளிகளுடன் பேசியவர்கள் யார் ? என்ற பட்டியல் தயாரித்து, அவர்களில் ஒவ்வொருவராக அழைத்து ஆயுதப்படை பிரிவில் வைத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ரூட்டு போட்டு கொடுத்தவர்கள் யார் ? என்பதை கண்டறியும் பொருட்டு இந்த விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கைதான பெண் தாதா அஞ்சலை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரவுடி சீசிங் ராஜாவை தீவிரமாக தேடிவந்த தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்தனர். தனது காதலி வீட்டில் பதுங்கி இருந்த சீசிங் ராஜா போலீசார் வரும் தகவலை முன் கூட்டியே அறிந்து அங்கிருந்து காரில் ஏறித்தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
ஒருங்கிணைந்த குற்றப்பிரிவில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் சீசிங் ராஜாவுக்கு நண்பராக உள்ளதாகவும் , அவர் தான் தனிப்படை போலீசார் அவரை தேடிச்செல்லும் தகவலை கசியவிட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் செல்போன் தொடர்பு விவரங்களை சேகரித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
Comments