மாணவன் கடத்தல்.. ஐ.ஏ.எஸ் அதிகாரியின் Ex மனைவி உயிரை மாய்த்தார்..! போலீசுக்கு பயந்து விபரீதம்
மதுரையில் பள்ளிக்கு சென்ற 14 வயது சிறுவனை, ஆட்டோ ஓட்டுனருடன் கடத்திய வழக்கில் தேடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி விவேகானந்தர் தெரு பகுதியை சேர்ந்த மைதிலி ராஜலட்சுமி என்பவரின் 14 வயது மகன் பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற போது மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். 2 கோடி ரூபாய் கொடுக்கா விட்டால் சிறுவனை கொலை செய்து விடுவதாக கடத்தல் காரன் மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக டிஸ்மிஸ் போலீஸ்காரர் செந்தில்குமார், நெல்லை ரஹ்மான் பேட்டையை சேர்ந்த ரவுடி அப்துல்காதர், தென்காசி வீரமணி, காளிராஜ் ஆகிய மூவரை எஸ்.எஸ்.காலணி காவல்துறையினர் கைது செய்தனர்.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தல் சம்பவத்துக்கு கூலிப்படையை ஏவியதாக ரவுடி ஐகோர்ட் மகாராஜா, அவரது காதலியும் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியுமான சூர்யா என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இருவரும் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அங்கிருந்து அவர்கள் இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பிச்சென்ற நிலையில் , இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரவுடி ஐகோர்ட் மகாராஜாவின் காதலி சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சூர்யாவின் மரணத்தின் பின்னணி குறித்து விசாரிக்க தனிப்படை போலீசார் குஜராத்துக்கு விரைந்துள்ளனர்.
Comments