எங்க அம்மா சாவுக்கு பழிவாங்க ஐ.டி. ஊழியர் குடும்பத்தை கருவறுத்தேன்...! ரகசிய காதல் சோகங்கள்
கடலூர் காராமணி குப்பம் அருகே ஐ.டி. ஊழியர் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தை சேர்ந்த ஐ.டி. ஊழியர் சுதன் குமார் அவருடைய தாய் கமலேஸ்வரி மற்றும் சுதன் குமாரின் மகன் நிஷாந்தன் ஆகிய மூன்று பேரும் கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் சடலமாக கிடந்தனர்.
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகளை அமைத்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சுதன் குமாரின் லிவிங் காதலி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் இந்த விசாரணை மேற்கொண்ட போலீசார், சுதன்குமார் வீட்டிக்குள் இருந்த ரத்தமும், அதே தெருவில் வசித்துவரும் சங்கர் ஆனந்த் என்பவரது வீட்டுச்சுவறில் இருந்த ரத்தக்கரையும் ஒரே நபரது என்பதை உறுதி செய்தனர்.
அதன் அடிப்படையில், சென்னையில் தலைமறைவாக இருந்த சங்கர் ஆனந்தை சுற்றி வளைத்தனர். கைவிரல் துண்டான நிலையில் காணப்பட்ட சங்கர் ஆனந்தை நெல்லிக்குப்பம் கொண்டு வந்து விசாரித்த போது அவர் தன்னுடன் இன்ஸ்டா ரீல்ஸ் செய்து வந்த சாகுல் ஹமீது என்பவருடன் இணைந்து இந்த கொடூர கொலைகளை செய்ததாக ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தனது தாயின் சாவுக்கு பழிக்கு பழி வாங்குவதற்காகவே சுதன் குமாரின் குடும்பத்தை கருவறுத்ததாக, போலீசாரிடம் சங்கர் ஆனந்த் பரபரப்பு வாக்குமூலமும் அளித்துள்ளார்.
தந்தையை இழந்த சங்கர் ஆனந்த் தாயுடன் வாழ்ந்து வந்ததாகவும், சங்கர் ஆனந்த் தனது கூட்டாளியுடன் சேர்ந்து இன்ஸ்டாரீல்ஸ் என ஜாலியாக ஊர் சுற்றி வந்த நிலையில், தாய் லட்சுமியை ஐ.டி. ஊழியர் சுதன் குமார் காதல் வலையில் வீழ்த்தி அவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது ரகசிய காதல் விவகாரம் அந்தப் பகுதி முழுவதும் தெரிந்து விட்ட நிலையில் சென்னையில் தங்கி வேலைப்பார்த்து வரும் தனது சகோதரர் ஹரி போன் செய்து தன்னையும் தனது தாயையும் கடுமையாக திட்டிதால் தன்னுடைய தாய் கடந்த ஜனவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக சங்கர் ஆனந்த் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது தான் தாயில்லா பிள்ளையாக அனாதையாக தெருவில் சுற்ற காரணம் சுதன் குமார் என்று அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டதாகவும், போலீசில் கூறியுள்ளார்.
இதனால் தனது தாய் தற்கொலைக்கு காரணமான சுதன் குமாரை குடும்பத்துடன் கொலை செய்ய வேண்டும் என கடந்த ஆறு மாதமாகவே திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாக சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கமலேஸ்வரி தன்னுடைய பேரன் நிஷாந்தனுடன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அந்த வழியாக சென்ற தானும் நிஷாந்தனிடம் விளையாட முயன்ற போது, தன்னை அனாதை பயலே என்ற வார்த்தையை சொல்லி கமலேஸ்வரி திட்டியதால் கடும் கோபம் அடைந்ததாக சங்கர் ஆனந்த் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு தனது கூட்டாளியுடன் சென்று 3 பேரையும் வெட்டி படுகொலை செய்ததாகவும், அப்போது கத்தி தவறுதலாக தன்னுடைய இன்னொரு கையில் பட்டு தன்னுடைய விரல் துண்டானதாகவும் தனது வாக்குமூலத்தில் சங்கர் கூறியுள்ளார்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை ஷாகுல் ஹமீதுடன் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று அங்கு உடல்களை தீ வைத்து கொளுத்தியதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சங்கர் ஆனந்திடமிருந்து பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளன இந்த நகைகள் , சுதன் குமார் வீட்டு பீரோவில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று கருதும் போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சங்கர் ஆனந்த், ஷாகுல் ஹமீது ஆகிய இருவரிடமும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments