ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலி ரூ 50 லட்சம் கொடுத்த அதிமுக பெண் வழக்கறிஞர் - திமுக பிரமுகர் கைது..! பா.ஜ.க பெண் பிரமுகரை தேடும் போலீஸ்

0 1463

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளின் வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ததாக அதிமுக பெண் வழக்கறிஞர், திமுக இலக்கிய அணி பிரமுகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ஜ.க மகளிரணி பிரமுகரை தேடி வருவதாகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ரவுடி சிவக்குமாரின் தாக்குதலில் இருந்து நூலிலையில் உயிர் தப்பி சாலையில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருக்கும் இவர் தான் பெண் வழக்கறிஞர் மலர்க் கொடி..!

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது கைது செய்யப்பட்ட அருளின் வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் அண்மையில் டெபாசிட் செய்யப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். அந்த பணம் பிரபல வழக்கறிஞரிடம் ஜூனியர் வழக்கறிஞராக உள்ள மலர்கொடி என்பவர் மூலம் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது, அவருக்கு உதவியாக இருந்த ஜூனியர் வழக்கறிஞர் ஹரிஹரனையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக திமுக இலக்கிய அணி பிரமுகரான சதீஷ் என்பவரையும் பிடித்து விசாரித்த போலீசார் மலர்க்கொடி, ஹரிகரன் , சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு மலர்கொடியின் பின்னணி விரு விருப்பானது என்கின்றனர் போலீசார். அதிமுக மேடைப்பாடகரான தோட்டம் சேகரின் 2 வது மனைவி மலர்கொடி. தோட்டம் சேகர் கொலைக்கு பழிக்கு பழியாக, ரவுடி மயிலை சிவக்குமாரை 19 வருடங்கள் கழித்து மலர்கொடியின் மகன் அழகு ராஜா தீர்த்துகட்டியதாகவும் தற்போது அவர் சிறையில் இருந்தவாறே தனது நெட்வொர்க்கை விரிவு படுத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். திருப்பதியில் வழக்கறிஞர் பயிற்சி மேற்கொண்ட மலர்கொடி பிரபல வழக்கறிஞரிடம் உதவியாளராக இருந்ததாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிறையில் இருக்கும் பிரபல ரவுடியின் ஆட்கள் மூலம் பெருந்தொகை கைமாறியதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியதாக பா.ஜ.க மகளிர் அணியை சேர்ந்த அஞ்சலை என்பவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். அடுத்தடுத்து ஒவ்வொருவரையாக போலீசார் கைது செய்து வரும் நிலையில் இந்த கொலையின் பின்னணியில் கோடிக்கணக்கில் முதலீட்டாளர் பணத்தை ஏப்பம் விட்ட மலை விழுங்கிகள் பலர் தொடர்பில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments