2 கோடி கேட்டு மாணவன் கடத்தல்.. ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி ரவுடிக் காதலனுடன் தலைமறைவு..! பெங்களூரில் தேடும் தனிப்படை
மதுரையில் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவிக்கும் அவரது காதலனான ரவுடிக்கும் தொடர்பிருப்பதாக கூறி பெங்களூரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மதுரை எஸ்.எஸ். காலனியை சேர்ந்த கணவனை இழந்த பெண் மைதிலி ராஜலெட்சுமி. பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற இவரது 14 வயது மகனை துப்பாக்கி முனையில் கடத்தி 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். கடத்தல் பின்னணியில் பெண் ஒருவர் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த வகையில் இந்த கடத்தலுக்கு திட்டம் போட்டுக்கொடுத்தது குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியான சூர்யா என்பதும், அவர் தனது காதலனும் ரவுடியுமான ஐகோட் மகாராஜனை ஏவி இந்த கடத்தல் திட்டத்தை அரங்கேற்றியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியாக இருந்த சூர்யா பியூட்டி பார்லர் நடத்தி வந்த நிலையில் ரவுடி ஐகோர்ட் மகாராஜனுடன் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாகி காதலாகி உள்ளது. சூர்யா தனது கணவரான ஐ.ஏ.எஸ் அதிகாரியை விவாகரத்து செய்து விட்டு ரவுடியுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், இருவருக்கும் ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சூர்யாவுக்கு சொந்தமான 1 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஒன்றை மைதிலி ராஜலெட்சுமியின் கணவரான ராஜ்குமார் விலைக்கு வாங்கியுள்ளார். மொத்த பணத்தில் 25 லட்சம் ரூபாய்யை கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில் ராஜ்குமார் உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து சூர்யா, தனக்கு தர வேண்டிய கடன் தொகையை, ராஜ்குமாரின் மனைவியிடம் கேட்ட போது, அது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கையை விரித்ததால், பள்ளி செல்லும் அவரது மகனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டதாக சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதன் படியே ஐகோர்ட் மகாராஜன் 2 கோடி ரூபாய் கேட்டு செல்போனில் மிரட்டியதாகவும், போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது. சூர்யா பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து அவர்கள் பெங்களூரில் பதுங்கி இருப்பதை கண்டு பிடித்து அங்கு தனிப்படை போலீசார் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரவுடி ஐகோர்ட் மகாராஜன் கையில் துப்பாக்கி இருப்பதால், அவரை தேடிச்சென்றுள்ள தனிப்படை போலீசாரும் தங்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கியை எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Comments