அமெரிக்க அதிபர்கள் - அதிபர் வேட்பாளர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது நபர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் கடந்த 150 ஆண்டுகளில் அதிபர்கள் மீதும் அதிபர் வேட்பாளர்கள் மீதும் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
1865-ஆம் ஆண்டு, தலைநகர் வாஷிங்டனில் உள்ள தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1881-ஆம் ஆண்டு, வாஷிங்டனில் ரயில் நிலையத்தில் அதிபராகப் பதவியேற்ற ஆறே மாதத்தில் ஜேம்ஸ் கர்ஃபீல்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1901-ஆம் ஆண்டு, நியூயார்க் மாகாணத்தில், அதிபர் வில்லியம் மெக்கின்லி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1912-ஆம் ஆண்டு, விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் காயமின்றி உயிர் தப்பினார்.
1963-ஆம் ஆண்டு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டாலர் நகரில் மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருந்த ஜான் எஃப் கென்னடி, சுட்டுக்கொல்லப்பட்டார்.
1968-இல், முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் சகோதரரும் அதிபர் வேட்பாளருமான ராபர்ட் எஃப் கென்னடி லாஸ் ஏஞ்சலீஸில் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1975-ஆம் ஆண்டு, 3 வாரங்களில் 2 முறை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அதிபர் ஜெரால்டு ஃபோர்டு உயிர் தப்பினார்.
1981-இல், வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதிபர் ரொனால்டு ரீகன் காயமடைந்தார்.
Comments