ஆம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டது எப்படி?.. வெளியானது கொடூர சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி

0 1218

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில் அதில் இன்று என்கவுண்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங்கை வெட்டுவதும், கொலை கும்பல் சுற்றி சுற்றி வந்து கண்காணித்து படுகொலையை நிகழ்த்திவிட்டு தப்பிச்செல்வதும் இடம்பெற்றுள்ளது. 

சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி ஆம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 8 பேர் சரணடைந்த நிலையில், பின்னர் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 11 பேரும் காவலில் எடுக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

3 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்த நிலையில், இவர்கள் உண்மையாக கொலையாளிகள் இல்லை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி கொலையில் ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என போலீசார் உறுதி படுத்தியிருந்தாலும் அறிவியல்பூர்வமாக ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்புடைய கொலையாளிகள் தப்பிச்சென்ற சிசிடிவி காட்சிகள் அன்றைய தினமே வெளியான நிலையில், தொடர் விசாரணையில் கொலைக்கு முன்பு ஒருமாத காலமாக அந்த பகுதியில் அவர்கள் கண்காணித்ததும், கொலைக்கு முன்னோட்டம் பார்த்ததும் தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் ஆம்ஸ்டிராங் கொலை சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சியில் இடம்பெற்றிருந்ததை போலீசார் உறுதி செய்திருந்த நிலையில் தற்போது அந்த சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.

போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் கருப்பு சட்டை அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி ஆம்ஸ்டிராங்கை கடந்து செல்வதும், கொலையாளிகள் அனைவரும் ஓரிடத்தில் கூடியபிறகு திருவேங்கடம் ஓடி வந்து பின்னால் இருந்து ஆம்ஸ்டிராங்கை வெட்டியதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மேலும், வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, அருள், சிவசக்தி, ராமு என்ற வினோத், விஜய், திருமலை, கோகுல், மணிவண்னன், சந்தோஷ் ஆகியோரும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதை சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆம்ஸ்டிராங்கை காப்பாற்ற முயன்றவர்களை அவர்கள் தாக்குவது, பின்னர் அங்கிருந்து தப்பிச்செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments