ரத்த வெள்ளத்தில் துடித்த தங்கை.. உதவி கேட்டு ஓடிய அண்ணன்.. சவக்குழியானது சாலைப்பள்ளம்..! இளம் பெண்ணை நசுக்கிக் கொன்ற லாரி

0 1056

சென்னை அண்ணாநகரில், மழைநீர் தேங்கிய சாலைப் பள்ளத்தில் இருசக்கர வாகனம் இறங்கியதில் தடுமாறி கீழே விழுந்த 24 வயது இளம்பெண், தனது அண்ணன் கண்முன்னே லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

மழை நீரால் சூழப்பட்டிருந்த சாலையில் இருந்த பள்ளம் தனது தங்கையின் உயிர் போக காரணமாகிவிட்டது என அண்ணன் கதறும் காட்சிகள்தான் இவை..

சென்னை ICF டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குப்பன்-தாயம்மாள் ஆகியோரின் மகன் வெங்கடேஷ், எம்.காம் பட்டதாரியான தனது தங்கை ஹேமமாலினியை திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் அழைத்துச்சென்றுள்ளார்.

அம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அம்பத்தூர் பாடி வழியாக கோயம்பேடு 100 அடி சாலையில் வந்துள்ளனர். அப்போது கனமழை ஆரம்பித்துள்ளது. இதனால், வீட்டிற்கு செல்வதற்காக அவசர அவசரமாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

திருமங்கலம் 100 அடி சாலை - அண்ணா நகர் 18வது பிரதான சாலை சந்திப்பு பகுதியில் கடக்கும்போது சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்துள்ளது. தண்ணீர் மூழ்கிய இடத்தில் இரண்டடி அகலத்தில் முக்கால் அடி ஆழத்தில் பள்ளம் ஒன்று இருந்துள்ளது.

சரியாக இரவு 11.15 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த வெங்கடேசன் தண்ணீரில் செல்லும் போது, அங்கு தண்ணீரில் மூழ்கி இருந்த பள்ளத்தில் இரு சக்கர வாகனம் இறங்கி ஏறிய போது நிலை தடுமாறி வெங்கடேசன் இடது புறமாகவும் அவரது தங்கை ஹேமமாலினி வலது புறமாகவும் விழுந்துள்ளனர்.

பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று ஹேமாமாலினியின் வயிற்றில் ஏறி இறங்கி வேகமாக சென்றது. இதில் ஹேமா மாலினி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஹேமமாலினியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பியோடிய லாரி ஓட்டுநரை சிசிடிவி காட்சிகள் வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்த பெரும் பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் இருவோடு இருவாக மூடியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மழை நீர் தேங்கிய சாலை பள்ளத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் பின்னால் வந்த லாரி தன் தங்கை மீது ஏறி இறங்கியதாகவும் ஹேமா மாலியின் அண்ணன் வெங்கடேசன் தெரிவித்தார்.

சாலையில் சென்ற யாருமே தன் தங்கையை காப்பாற்ற முன் வரவில்லை எனவும் தன் கண்முன்னே தன் தங்கையின் உயிர் பிரிந்ததாகவும் வெங்கடேசன் கதறி அழுதார்.

சாலையில் தெரு விளக்குகள் எரியவில்லை எனவும் தன் தங்கை இறப்புக்கு சாலையில் இருந்த பள்ளமே காரணம் எனவும் இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் தனது 24 வது பிறந்தநாளை கொண்டாடிய ஹேமமாலினி, வணிகவியல் ஆசிரியர் ஆகவேண்டும் என்ற கனவில் இருந்தாக தெரிவித்த அவரது குடும்பத்தினர், தங்களது பிள்ளைக்கு நடந்தது போல வேறு யாருக்கும் நடக்கக்கூடாது எனவும் உடனடியாக சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் கொடுத்த அரசு, அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலையில் சரிசெய்யப்படாத பள்ளத்தால் நிகழ்ந்த விபத்தில் மகளை இழந்துவாடும் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments