நேபாளத்தில் 63 பயணிகளுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்... மீட்புப் பணிகளை துரிதப்படுத்த பிரதமர் புஷ்ப கமல் தாஹல் உத்தரவு
மழை காரணமாக மத்திய நேபாளத்தில் மதன்-அஷ்ரித் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 63 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் சிக்கி, அருகில் இருந்த திரிசூலி ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கவுர் என்ற இடத்துக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்தில் இருந்து மூன்று பேர் குதித்து உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. ஆற்றில் பேருந்துகளுடன் அடித்துச் செல்லப்பட்ட பயணிகளை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேபாள ஆயுதப்படை டி.ஐ.ஜி புருஷோத்தம் தாபா தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆற்றில் பயணிகள் அடித்துச் செல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் புஷ்ப கமல் தாஹல், மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments