நெல்லையில் போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்த இருவருக்கும் ஜாமீன் - போலீசாரை கண்டித்த நீதிபதி
போலீசார் மது வாங்கி கொடுத்ததால், 2 பேர் மீது பொய் வழக்கு போட துணைபோனதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் புகார்தாரர் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரை தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி தங்க செயினை பறிக்க முயன்றதாக முருகன், பாபு ஆகிய இருவர் மீதும் வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் கேட்டு இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நீதிபதி நக்கீரன் முன் ஆஜர் படுத்தப்பட்ட நாராயணன், போலீசார் தமக்கு மது வாங்கி கொடுத்ததாகவும், கையெழுத்து போட மறுத்தால் தம்மை அடிப்பார்கள் என அஞ்சி கையெழுத்து போட்டதாகவும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.
செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தால் தான் குற்றவாளிகள் திருந்துவார்கள் என கூறிய நீதிபதி, ஒருவர் மீது 20 வழக்குகள் உள்ளன, 30 வழக்குகள் உள்ளன என கூறுவது காவல்துறைக்கு பெருமை அல்ல என கண்டித்தார்.
Comments