தீபக்ராஜா கொலைக்கு பதில் காட்டுக்குள் பதுங்கிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுத்தூக்கிய போலீஸ்..! கூலிப்படை ஆபரேசனில் முதல் பலி

0 1343

நெல்லையில் தீபக்ராஜா கொலைவழக்கில் தொடர்புடையதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி நவீனுக்கு திருச்சியில் அடைக்கலம் கொடுத்ததாக தேடப்பட்டு வந்த ரவுடி துரை என்பவர் புதுக்கோட்டை அருகே போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கூலிப்படை ஆபரேசனில் போலீஸ் வைத்த குறிக்கு முதலாவதாக விழுந்த பலி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

நெல்லையில் கொல்லப்பட்ட ரவுடி தீபக்ராஜா கொலை வழக்கில் கூலிப்படை ரவுடியான நவீன் என்பவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். நவீன் ஏற்கனவே சென்னை மெரீனாவில் ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவரது கொலை வழக்கிலும் போலீசாரால் கைது செய்யப்பட்டவர். இவரை பெரிய ரவுடிகள் பின்னணியில் இருந்து கூலிப்படை போல இயக்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்தவகையில் தீபக்ராஜா கொலை சம்பவத்துக்கு பின்னர் நவீனுக்கு திருச்சியில் அடைக்கலம் கொடுத்தது ரவுடி துரை என்கிற துரைசாமி என்பது தெரியவந்ததால் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அண்மையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. குறிப்பாக கூலிப்படை ரவுடிகள், தேடப்படும் ரவுடிகளை விரைவாக கைது செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

அந்தவகையில் திருச்சி போலீசார் தேடிவந்த ரவுடி துரைசாமி புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்து வேறு ஒரு கொலைக்கு சதி திட்டம் தீட்டி வருவது தெரியவந்தது. இதையடுத்து காட்டுப்பகுதிக்குள் இருந்த ரவுடி துரையை போலீசார் பிடிக்கச்சென்ற போது நடந்த பதில் தாக்குதலில் துரை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

காட்டுக்குள் ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையா தலைமையிலான போலீசார் ரவுடி துரையை சுற்றி வளைத்ததாகவும் , அவர், காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டதில் துரை பலியானதாக போலீசார் தெரிவித்தனர். காயம் அடைந்த எஸ்.ஐ.மகாலிங்கம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கொல்லப்பட்ட துரையின் சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது

போலீஸ் என்கவுடரில் பலியான துரை, ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொணடவர் என்றும் நெட்டூர் கண்ணன் என்ற கூலிப்படை ரவுடியுடன் சேர்ந்து கூலிக்காக கோவையிலும் ஒரு கொலை சம்பவத்தை நிகழ்த்தியவர் என்று சுட்டிக்காட்டிய போலீசார் , கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 57 வழக்குகள் துரை மீது இருப்பதாக தெரிவித்தனர். கூலிப்படையை ஒழிக்க போலீசார் எடுத்துள்ள இரும்புக்கர நடவடிக்கையின் முதல் பலி ரவுடி துரைசாமி என்கின்றனர் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments