குற்றால அருவியில் போதையில் ஆட்டம் ஈரத்துணியோடு இழுத்துச்சென்ற போலீஸ் மதுவோடு வாங்க.. தெருவோடு போங்க ..! வாரவிடுமுறை கொண்டாட்ட பரிதாபம்
குற்றாலம் அருவியில் போதையில் குளித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர் பாதுகாப்புக்கு நின்ற காவலரை தாக்கியதால் ஈரத்துணியோடு பிடித்து இழுத்துச்செல்லப்பட்டார்.
மதுவுடன் வாரவிடுமுறையை கொண்டாட வந்தவர்களை போலீசார் விரட்டிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
குற்றாலம் சீசன் தொடங்கியதுமே டாஸ்மாக் உபயத்தால் குடிமகன்கள் அருவியில் ஆட்டம் போட்டு போலீசாரிடம் வம்பிழுத்து வசமாக சிக்கிக் கொண்ட காட்சிகள் தான் இவை..!
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் களை கட்டியுள்ளாதால் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. போதை மிகுதியால் ஒருவர் தடாகத்தில் விழுந்தார் அவரை அங்கு நின்ற போலீசார் மீட்டு எச்சரித்து அனுப்பினர்
அருவிகளில் குளிக்க ஆடிக்கொண்டே கும்பலாக முண்டியடித்த போது ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து நண்பர்களுடன் வந்திருந்த இளைஞர் ஒருவர் போதையில் அருவியில் குளித்தவர்களை தள்ளியதாக கூறப்படுகின்றது. அதனை அங்கு பாதுகாப்பு நின்றுந்த காவலர் ஒருவர் தடுத்த போது அவரையும் தாக்கியதால் அவரை போலீஸ் காரர் மடக்கிப்பிடித்தார்.
அந்த இளைஞரை அருவியில் இருந்து ஈரத்துணியுடன் பிடித்து வெளியே இழுத்துவந்தார். அவரது நண்பர்கள் அவர் மாணவர் என்று கூறி விடச்சொல்லி கெஞ்சினர்
அவரை அங்குள்ள தரையில் அமரச்சொல்ல, காவலரை தாக்கிய இளைஞரோ மித மிஞ்சிய போதையில் அமரமறுத்து அடம்பிடித்தார்
அந்த இளைஞரின் வேட்டியை போலீஸ்காரர் வசமாக பிடித்துக் கொண்டதால நழுவ இயலாமல் தவித்த போதை ஆசாமி வேறு வழியின்றி கீழே அமர்ந்தார்
அவரிடம் எங்கே படிக்கிறாய்? என்று போலீஸ்காரர் கேட்ட போது, தான் படிக்கவில்லை மாடுமேய்ப்பதாக ஆத்திரத்தில் தெரிவித்தார்
அந்த இளைஞர் உள்ளிட்ட இருவரை போதையில் ரகளை செய்ததாக போலீசார் காவல் நிலியம் அழைத்துச்சென்றனர். அதே போல அருவிக்கு செல்லும் வழியில் அமர்ந்து “கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி” என்ற பாடலை ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டபடி அது அருந்திக் கொண்டிருந்த ராஜபாளையத்து ராசாக்களை எச்சரித்த போலீசார் மதுவை குப்பையில் கொட்டச்செய்தனர்
அருவியில் குளித்த கையோடு காரில் அமர்ந்து மது அருந்தியவர்களையும் போலீசார் சத்தம் போட்டு விரட்டி விட்டனர்.
அருவிக்கு குளிக்க வரும் நபர்கள் போதையில் இருந்தால் அனுமதிக்க படமாட்டார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தால் மட்டுமே போதை ஆசாமிகளின் அலம்பல்கள் அருவிகளில் குறையும் என்பதே குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.
Comments