முருங்கைக்காய் சிப்ஸ் நாயகி வீட்டு பீரோவில் கைவைத்த பணிபெண்கள் சிக்கியது எப்படி ? சிசிடிவியில் பேசியது என்ன ?
கோவையில் நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண்களை சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோவை வடவள்ளி மருதநகர் பகுதியை சேர்ந்தவர் அதுல்யா ரவி. இவர் நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி செல்வி என்பவரை தனது வீட்டு வேலைக்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக விஜயலட்சுமியின் வீட்டு பீரோவில் வைத்திருந்த பணம் திருட்டுப் போனதாக தெரிகிறது. ஆனால் விஜயலட்சுமி மற்றும் அதுல்யா ரவி இருவரும் அடிக்கடி சென்னை சென்று வருவதால் கவனிக்க முடியாமல் இருந்ததாக தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் திருட்டை கண்டுபிடிக்க வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த பணிப்பெண் மற்றும் அவரது தோழி இருவரும் சேர்ந்து விஜயலட்சுமியின் பீரோவை திறந்து உள்ளே இருந்த 2000 ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதும், பீரோவில் தாங்கள் நினைத்தது போல நிறைய பணம் இல்லை என்பது குறித்து பேசிக் கொள்ளும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி இருந்தன.
மேலும், பீரோவில் அவர்கள் எப்போதும் நிறைய பணம் வைப்பதில்லை என்றும், இருக்கும் 2000 ரூபாயை எடுத்துக் கொள்ளலாம் என பேசிக் கொண்ட அவர்கள், பாஸ்போர்ட்டை எடுத்துச் சென்று விடுவோம், அவர்கள் அதை தேடி அலையட்டும் என்றும் கூறியது பதிவாகி இருந்தது. இவற்றைப் பார்த்த விஜயலட்சுமி வடவள்ளி போலீசில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தார்
புகார் அடிப்படையில் வீட்டில் வேலைப்பார்த்து வந்த செல்வி மற்றும் அவரது தோழி இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்த போது பாஸ்போர்ட்டை தாங்கள் எடுக்கவில்லை என அவர்கள் முதலில் கூறியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் பாஸ்போர்ட்டையும் திருடியதை ஒப்புக்கொண்ட செல்வி அச்சத்தில் அதனை கிழித்து வீசி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நம்பி வேலைக்கு வைத்திருந்த பணிபெண்கள் பணத்தை திருடியதுடன் பாஸ்போர்ட்டையும் கிழித்து வீசிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments