காதல் மனைவி கொலை.. கதை அளந்த கணவர்.. 15 வருடம் கழித்து அம்பலம்..! மொட்டை கடிதத்தால் சிக்கிய நண்பர்கள்

0 1115

காதல் மனைவியை  நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த கணவர், சடலத்தை வீட்டின் கழிவு நீர் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான உண்மை 15 வருடங்கள் கழித்து கேரள காவல்துறைக்கு வந்த மொட்டை கடிதம் ஒன்றின் மூலம் அம்பலமாகி உள்ளது  

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மன்னார் காவல் நிலையத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மொட்டை கடிதம் ஒன்று வந்தது. அதில் அண்மையில் நடத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள நபரை விசாரித்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இளம்பெண்ணின் கொலை சம்பந்தமான விபரங்கள் வெளியே வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகள், மொட்டை கடிதம் குறித்த விசாரணையின் முடிவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலனுடன் மாயமானதாக கூறப்பட்ட கலா என்ற 27 வயது பெண்ணை கொலை செய்து கழிவுநீர் தொட்டிக்குள் சடலத்தை மறைத்து கணவர் நாடகமாடியிருப்பதை கண்டறிந்தனர். கொலையில் தொடர்புடையதாக ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரித்த போது கொலை குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

இரமத்தூர் பகுதியை சேர்ந்த அனில் என்பவரும், கொல்லப்பட்ட கலாவும் மாணவ பருவம் முதல் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் கலாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அனில் அங்கோலா நாட்டிற்கு வேலைக்காக சென்ற நிலையில், கலாவுக்கு வேறொரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்ப்பட்டதாக நண்பர்கள் அனிலுக்கு தகவல் அளித்தனர்.

ஆத்திரமடைந்த அனில் தாயகம் திரும்பி வந்து கலாவிடம் விசாரிக்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் அனில் சமரசம் செய்து கொண்டது போல் நடித்து, கலாவை அழைத்துக் கொண்டு வாடகை காரில் நண்பர்கள் 5 பேருடன் குட்டநாடு பகுதிக்கு சென்று அங்கு கலாவின் கழுத்தை துப்பாட்டாவால் நெரித்து கொலை செய்ததாகவும், சடலத்தை காரில் வீட்டுக்கு கொண்டு வந்து கழிவுநீர் தொட்டிக்குள் வீசி மூடியதாக தெரிகிறது. கொலையை மறைத்த அனில், தன் மனைவி மற்றொரு இளைஞரை காதலித்து வெளிநாட்டிற்கு ஓடிப்போய் விட்டதாக கூறியுள்ளார். இதனால் கலாவை யாரும் தேடாமல் இருந்துள்ளனர்.

நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த கொலை சம்பவம் அம்பலமானதாக கூறப்படும் நிலையில், கொலை வழக்கில் 5 பேரை கைது செய்த போலீசார் இஸ்ரேல் நாட்டில் தங்கி வேலைப்பார்த்து வரும் அனிலை தாயகம் வரவழைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments