அதிகாரிகள் ரைடால் அதிர்ச்சி.. சமையல் கூடத்தை பூட்டி ஓட்டல் உரிமையாளர் அடம் ..! சாவிக்காக காத்திருந்தும் பலனில்லை

0 850

திருவள்ளூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிவப்பு வர்ணம் சேர்க்கப்பட்ட சிக்கனை கைப்பற்றிய நிலையில், சமையல் கூடத்தை பூட்டி சாவியை கொடுக்க மறுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்குள் உள்ள டீக்கடை, பேக்கரி மற்றும் பிற கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பேக்கரியில் காலாவதியான சுமார் 10 கிலோ கேக் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன

மிக்சர் கடையில் காலாவதியான பிஸ்கட், மிக்சர் என சுமார் 100 பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள ஹோட்டலில் கலர் பவுடர் கலக்கப்பட்ட ஐந்து கிலோ காலாவதியான இறைச்சி, சுமார் 200 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து குப்பையில் போட்டு அழித்தனர்

ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட போது அதிக வர்ணம் சேர்க்கப்பட்ட சிக்கனை கைப்பற்றி குப்பையில் கொட்டினர்

அபராதம் செலுத்த சொன்ன போது வியாபாரத்தை கெடுத்துட்டு பணம் கேட்டா எப்படி கொடுக்க முடியும் ? என்று கூறிய ஓட்டல் உரிமையாளர், நான் மட்டுமா பிரியாணியில் கலர் பவுடர் போடுறேன்... ஊருல எல்லா பேரும் தான் போடுறான்.. என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

அந்த ஓட்டலின் சமையல் கூடத்துக்குள் அதிகாரிகள் செல்வதற்கு முன்பாக அதன் கதவை பூட்டிவிட்டு சாவியை ஓட்டல் உரிமையாளர் கொடுக்க மறுத்தார்

“60 என்றதுக்குள்ள சாவி வரலைன்னா கடைக்கு சீல் வைப்பேன்” என்று அதிகாரிகள் ஆவேசமானதோடு, சாவிக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்

சாவியை எடுத்து வந்ததாக கூறி வேறு ஒரு பூட்டின் சாமியை கொடுத்து அதிகாரிகளை சோதித்தார் ஓட்டல் உரிமையாளர்.

பொறுமை இழந்த அதிகாரிகள் பூட்டை உடைக்க முயன்ற போது, தனக்கு முனிசிபாலிட்டியில் அதிகாரிகளை தெரியும் என்றும் சேர்மன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுல தான் இருக்கேன் என்றும் தனது செல்வாக்கை ஓட்டல் உரிமையாளர் எடுத்துச்சொன்னதும், நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து சத்தம் காட்டாமல் கடையை விட்டு வெளியேறினர்

திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் 19 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 23 ஆயிரம் ரூபாயும், உணவு பாதுகாப்புத் துறையினர் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துவிட்டுச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments