கவுன்சிலர்ன்னா சும்மாவா... ஆக்கிரமிப்பை அகற்றியவரை தாக்கிய மதிமுக கவுன்சிலர்..! நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஷாக்
சென்னை ஈக்காட்டு தாங்கலில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி ஓட்டுனரை, மதிமுக கவுன்சிலர் விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது
ஆக்கிரமிப்பை அகற்ற ஜே.சி.பியுடன் வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியரை மதிமுக கவுன்சிலர் தாக்கிய காட்சிகள் தான் இவை..!
சென்னை ஈக்காட்டுதாங்கல் 100 அடி சாலையில் 167 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்த ஜே.சி.பி ஓட்டுனரை, பெருநகர சென்னை மாநகராட்சியின் 139 வார்டு மதிமுக கவுன்சிலர் சுப்பிரமணி என்பவர் தரக்குறைவான ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், விரட்டி விரட்டி தாக்கியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளகளில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் போலீசில் அளிக்கப்பட்டாத நிலையில் மதிமுக கவுன்சிலர் சுப்பிரமணி கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 27 ஆம் தேதி தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்துக்கு இடையூறாக ஜேசிபி வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது என்றும், அதனை எடுக்கும்படி கூறிய போது ஜேசிபி ஓட்டுனர் அவதூறாக பேசியதால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும், அதனை யாரோ வீடியோ எடுத்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
ஜே.சி.பி ஓட்டுனரை தாக்கியதோடு மட்டுமில்லாமல், தான் தாக்கிய காட்சியை வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடமே ஒப்புதல் வாக்குமூலம் போல புகார் அளித்த கவுன்சிலர் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments