அ.தி.மு.க பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை.. பின்னணியில் ஆடு திருட்டு?

0 789
அ.தி.மு.க பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை.. பின்னணியில் ஆடு திருட்டு?

கடலூரில் அ.தி.மு.க பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி கடை நடத்தி வந்ததும், அதில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடலூர் வண்டிப்பாளையம் ஆலைக் காலனி பகுதியை சேர்ந்த புஷ்பநாதன், அப்பகுதியில் கசாப் கடை நடத்தி வந்தார். அ.தி.மு.க மாவட்ட பிரதிதியான இவர் கடலூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலராகவும் பதவியில் இருந்தார். சனிக்கிழமை நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது வழிமறித்த கும்பல் ஒன்று புஷ்பநாதனை முகத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

தகவலறிந்த புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.கவினர் அப்பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர். 3 தனிப்படைகளை அமைத்த போலீஸார் இது அரசியல் ரீதியான கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணையை துவங்கினர்.

ஆலைக்காலனி பகுதியைச் சேர்ந்த நேதாஜி, அஜய் மற்றும் சந்தோஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக புஷ்பநாதனை கொலை செய்தது தெரிய வரவே, தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்தனர் போலீஸார். அவர்கள் மூவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.

இவர்கள் 3 பேரும் பல்வேறு பகுதிகளில் ஆடுகளைத் திருடி அதனை புஷ்பநாதனுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். குறைந்த விலைக்கு ஆடுகளை வாங்கும் புஷ்பநாதன் தான் நடத்தி வந்த கசாப் கடையில் அதனை கறியாக்கி விற்பனை செய்து வந்துள்ளார். ஆடு திருடர்கள் 3 பேரும் கடந்தாண்டு, தேவனாம்பட்டினத்திற்கு காரில் சென்று தி.மு.க பிரமுகர் ஒருவர் வீட்டில் 8 ஆடுகளை திருடினர். இதுகுறித்த வழக்கில் நேதாஜி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்த போலீஸார் அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

தங்களை புஷ்பநாதன் ஜாமின் எடுப்பதோடு, வாகனத்தையும் போலீஸிடமிருந்து மீட்டுத் தருவார் என அவர்கள் நினைத்திருந்ததாகவும் அது நடக்கவில்லை என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள் இதுகுறித்து புஷ்பநாதனிடம் கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் காரணமாகவே மதுபோதையில் இருந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து புஷ்பநாதனை வெட்டிக் கொலை செய்ததாக தெரிவித்தனர் போலீஸார்.

இதற்கிடையே நேதாஜி மற்றும் அஜயின் வீடுகளுக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். எனவே, அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments