விஜய்யின் ‘பவுன்சர் அரசியல்’ ரசிகர்களை தாக்கிய காட்சி.. செய்தியாளருக்கும் மிரட்டல்..! மன்னிப்பு கேட்க வைத்த நிர்வாகிகள்
சென்னையில் மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கி விட்டு விஜய் வீட்டுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன்பாக அவரை பார்ப்பதற்கு மண்டபத்துக்கு வெளியில் ஆர்வமுடன் நின்ற ரசிகர்களை பவுன்சர்கள் விரட்டினர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை முதல் இரவு 8 மணிவரை 10 மணி நேரம் மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுமையாக பரிசுகளை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரங்கிற்குள் துபாய் பவுன்சர் குழுவும், அரங்கிற்கு வெளியே திருவான்மியூர் போலீசாரும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரவு விழா முடிந்து வீட்டிற்கு புறப்படும் விஜய்யை காண்பதற்காக மண்டப வளாகத்துக்குள் இரு ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களை பவுன்சர்கள் ஒருமையில் திட்டி தள்ளிவிட்டனர்
இதனை செய்தியாளர் படம் பிடித்ததால் அவரை நோக்கி பவுன்சர் அடிக்க பாய்ந்தார். உடன் இருந்த செய்தியாளர்கள் மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
விஜய் மண்டபத்தில் இருந்து சென்றதும், சம்பந்தப்பட்ட பவுன்சரை கண்டித்து செய்தியாளர்கள் மண்டப வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
த.வெ.க மாவட்ட நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட பவுன்சரை அழைத்து வந்து செய்தியாளரிடம் மன்னிப்பு கேட்க வைத்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
எட்டி நின்றாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கும் ரசிகர்கள் , தங்கள் நாயகனை பார்த்ததும் ஆர்வக்கோளாறில் எட்டிப்பிடிக்க எத்தனித்து பவுன்சர்களிடம் பல்பு வாங்கிக் கொள்வது தொடர்கதையாகி வருகின்றது.
Comments