வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்.. முதியவரைத் தூண்டிவிட்ட இடைத்தரகர்கள்.. கேள்விகளால் துளைத்தெடுத்த வட்டாட்சியர்!

0 729

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் முதியவர் ஒருவரைத் தூண்டிவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கச் சொல்லி யோசனை கொடுத்த இடைத்தரகர்களை கேள்விகளால் துளைத்தெடுத்த வட்டாட்சியர், முதியவருக்கு பெட்ரோல் வழங்கிய பங்க்குக்கும் சீல் வைத்து அதிரடி காட்டினார்.

சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த 70 வயதான நரசிம்மன் என்பவர், டிப்டாப் உடையணிந்த சிலருடன், ஒரு லிட்டர் பெட்ரோல் பாட்டிலோடு, பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். நரசிம்மனுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூறி, உடன் வந்த அந்த டிப் டாப் நபர்கள் முழக்கங்கள் எழுப்பினர். முதியவரும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

அப்போது வட்டாட்சியர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் வந்து, தாசில்தார் இன்னும் வரவில்லை என்றும் சிறிது நேரம் கழித்து வருமாறும் அவர்களிடம் கூறினார். டிப் டாப் ஆசாமிகள் அதைப் பொருட்படுத்தாமல் அலுவலக நுழைவு வாயில் படிக்கட்டிலேயே அமர்ந்து கொண்டனர். வட்டாட்சியர் வரும் நேரம் என்பதால், வாயிலில் அமர வேண்டாம் என அப்பெண் கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் அலுவலகம் வந்த வட்டாட்சியர் ஆறுமுகம், பிரச்சனை குறித்து விசாரித்தார். அப்போதுதான் நரசிம்மனுக்கு ஏற்கனவே ஓய்வூதியத்துக்கான ஆணை வந்துவிட்டது தெரியவந்தது. முதியவர் வந்து பெற்றுச் செல்லாததால் அலுவலகத்திலேயே இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

என்ன ஏது என்று விசாரிக்காமல் எதற்காக போராட்டம், வாக்குவாதம் செய்தீர்கள் என்றும் முதியவரை தீக்குளிக்கவும் தூண்டிவிட்டீர்கள் என வட்டாட்சியர் கேட்கவே, டிப்டாப் ஆசாமிகள் திக்கித் திணறினர்.

அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தொல்லை செய்ததாக முதியவர் மீதும் அவருடன் வந்தவர்கள் மீதும் வட்டாட்சியர் காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, அந்த டிப் டாப் ஆசாமிகள் மூலைக்கு ஒருவராக மாயமாகினர். அத்துடன் விடாத வட்டாட்சியர், வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல் கொடுக்கக்கூடாது என்று தெரிந்தும் யார் உங்களுக்கு பெட்ரோல் கொடுத்தது என முதியவரிடம் வினவினார். தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்க்கையும் இழுத்து மூடி சீல் வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments