நெருங்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடன், ட்ரம்ப் நேரடி விவாதம்.. அனல் பறந்த குற்றச்சாட்டுகள்

0 756

அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய வேட்பாளர்களான அதிபர் ஜோ பைடன், ட்ரம்ப் இடையே முதலாவது நேரடி விவாதம் நடந்தது. 

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அட்லான்டாவின் சிஎன்என் ஊடக ஸ்டூடியோவில் ஜோ பைடன், ட்ரம்ப் இடையேயான நடந்த முதலாவது நேரடி விவாதம் இது.

வெளியுறவு, பொருளாதாரம், குடியுரிமை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதம் செய்தனர். இருவரும் அவரவர் ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்ட நிலையில், அடுத்தவரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.

விவாதத்தில் ட்ரம்ப்பை திஸ் கெய் (THIS GUY) என்றே குறிப்பிட்ட பைடன், அவரை பூனை என்றும் தேர்தலை அபகரிக்க முயன்றவர், புலம்பல் பேர்வழி, பாலியல் தொழிலாளியுடன் தொடர்பு கொண்டவர், ரத்தத்தை உறிஞ்சுபவர் என்றும் பல கடுமையான சொற்களால் விமர்சித்தார்.

ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் பைடன் தோல்வியடைந்ததாக ட்ரம்ப் விமர்சித்த போது, உலக விவகாரங்களில் தனது அரசு சரியாக முடிவெடுத்ததாக பைடன் பதிலளித்தார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என ட்ரம்பை பைடன் கூறியபோது, அதிபரின் மகன் தண்டிக்கப்பட்டதை ட்ரம்ப் குறிப்பிட்டார்.

விவாதத்தின்போது பைடன் சில வார்த்தைகளை மாற்றிக் கூறியதையும் ஜலதோஷத்தால் இருமிய தருணங்களையும் சுட்டிக்காட்டி வயது மற்றும் உடல் தகுதி அடிப்படையில் அதிபர் பதவிக்கு பைடன் தகுதியானவரல்ல என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

விவாதம் தொடங்கும் முன் மேடையில் இரு வேட்பாளர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம் என்ற நிலையில், ஜோ பைடனும் ட்ரம்ப்பும் கைகுலுக்கவில்லை. பொருளாதாரம் மற்றும் எண்ணிக்கை தொடர்பான பதில்களில் பைடன் அதிக தடுமாற்றத்தை சந்தித்ததாகவும் முதலாவது விவாதத்தில் ட்ரம்ப்பின் கை ஓங்கியதாகவும் அமெரிக்க ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments