சீட்டிங் திருமணம்.. போலீஸ் மாப்பிள்ளைக்கு ஊர் கூடி கையால் மொய் வைத்த சம்பவம் விழுந்த அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி..!
நெல்லை மணிமுத்தாறு பட்டாலியனில் மனைவி குழந்தைகளோடு வசித்து வரும் போலீஸ்காரர் ஒருவர், தனக்கு திருமணமாகவில்லை என்று இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த நிலையில், திருமணத்துக்கு சென்ற பெண் காவலர் மூலம் உண்மை தெரியவந்ததால், போலீஸ் மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் அறங்கேறி உள்ளது
ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றி மணந்ததால் ஊர் கூடி போலீஸ் மாப்பிள்ளையின் முதுகில் கையால் மொய் எழுதிய காட்சிகள் தான் இவை..!
குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் M.com CA படித்து முடித்து விட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆடிட்டிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கொரோனா காலத்தில் பேருந்தில் வேலைக்கு சென்று வந்தபோது மார்த்தாண்டம் பகுதியில் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அம்பாசமுத்திரம் காவலர் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் செல்போன் நம்பர் வாங்கி, முதலில் அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்திய ராஜேஷ், சில மாதங்கள் கழித்து பெண்ணின் தாய் தந்தையிடமும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளான் பெண்ணை திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.
தான் சென்னையை சேர்ந்தவர் என்றும் தன்னுடைய தாய் தந்தையர் இருவரும் சிறுவயதிலேயே தன்னை பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விட்டதால் தனக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை என்றும் கூறி உள்ளார். இதனை நம்பி பெண் வீட்டார் 15 சவரன் தங்க நகையை வரதட்சணையாக போட்டு தடபுடலாக வியாழக்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து திருமணம் நடத்தி உள்ளனர்.
திருமணம் முடிந்து விருந்துக்கு மணமக்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் மணப்பெண்ணின் வீடு அருகில் வசிக்கும் பெண் காவலர் ஒருவர் ராஜேஷை அடையாளம் கண்டு கொண்டார். உங்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேன் ? என்று அவர் கூற, தான் சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருவதாக கூறி நழுவி உள்ளார் ராஜேஷ்.
இரண்டு வருடங்களுக்கு முன் கொரோனா காலத்தில் தன்னுடன் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர் ராஜேஷ் தான் இவர் என்பதை கண்டறிந்த அந்த பெண் காவலர், உனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாகத்தானே கூறினாயே என்று கேட்டதோடு, மணமக்கள் இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுத்து காவலர்கள் வாட்ஸ்அப் குழுவில் போட்டதும், போலீஸ் மாப்பிள்ளை பொறியில் சிக்கிய எலியாய் சிக்கிக் கொண்டார்.
ராஜேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளது, குடும்பத்துடன் மணிமுத்தாறு கேம்ப் காவலர்கள் தங்கும் விடுதியிலேயே வசித்து வரும் நிலையில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தது அம்பலமானது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் அழுது தவிக்க, பெண்ணின் உறவினர்கள் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் , போலீஸ் மாப்பிள்ளை ராஜேஷை காவல்நிலையம் அழைத்து செல்ல முயன்றபோது, பெண்ணின் உறவினர்கள் ராஜேஷை சரமாரியாக தாக்கி நையப்புடைத்தனர்
கிழிந்த டி சர்ட்டுடன் ராஜேஷை மீட்ட காவலர்கள் ஆட்டோ ஒன்றில் ஏற்றி காவல்நிலையம் அழைத்து சென்றனர் பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரானா காலத்தில் ஊரே அடங்கி இருந்த நேரத்தில் போலீஸ்காரர் ராஜேஷ் பார்த்த காதல் டியூட்டிக்கு, பெண்வீட்டார் இன்று போனஸ் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடதக்கது.
Comments