எங்க புள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே பிரசவத்துக்குப் பின் கோமா நிலைக்குச் சென்ற பெண் மகள் கண் விழிப்பார் என கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்துக்குப் பின் தலையில் காயங்களுடன் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். அவருக்கு என்ன நிகழ்ந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், ஓராண்டு காலமாக அந்தக் குடும்பம் கண்ணீரில் தவித்து வருகிறது.
கோமா நிலையில் இருக்கும் மகளுக்கு என்ன நடந்து என்று சொல்லாமல் ஓராண்டு காலமாக அலைக்கழிக்கும் அரசு மருத்துவரை திட்டித்தீர்க்கும் தந்தையின் குமுறல்தான் இது....
தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண், ஆரணி அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. தாயையும் சேயையும் பார்க்க அடுத்த ஒரு மணி நேரத்துக்கு தங்களை அனுமதிக்கவில்லை என்று கூறும் உறவினர்கள், தங்களிடம் எதுவும் தெரிவிக்காமல் ஜெயந்தியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று கூறினர்.
பின்னந்தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயந்தி, அங்கிருந்தும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோதுதான், ஜெயந்தி கோமா நிலைக்குச் சென்றது தெரியவந்துள்ளது. பிறகு அங்கிருந்து தரமணியிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் ஜெயந்தி. இப்படியே ஓராண்டு காலமாக மருத்துவமனை, மருத்துவமனையாக கண்ணீரோடு அலைந்து வரும் அவரது உறவினர்கள், தங்களுக்கு உரிய நீதி வேண்டும் என குமுறுகின்றனர்.
Comments