யாருக்கும் பாரமில்லாமல் வாழ ஆசை 78 வயது தன்னம்பிக்கை பாட்டி ..!
மதுரையில் கணவர் இறப்புக்கு பின்னர் தனது மூன்று மகன்களும் குடும்பத்துடன் கஷ்டப்படுவதால், அவர்களுக்கு பாரமாக இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய 78 வயது மூதாட்டி ஒருவர், தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
இந்த மூதட்டிக்கு வயது 78... கைகால்களில் நடுக்கமில்லை... குரலில் பிறழ்வு இல்லை... ஓல்டு லேடியாக இருந்தாலும் தனியாக வாழும் சாத்தம்மை இவர் தான்..!
சிவகங்கை மாவட்டம் கல்லல் அடுத்த கண்டரமாணிக்கம் கிராமத்தில் பிறந்தாலும், தந்தை பெங்களூரில் பணிபுரிந்ததால், அங்குள்ள தனியார் கான்வெண்டில் 3 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துள்ளார் சாத்தாம்மை. அந்த ஆரம்ப கல்வி தான் , குடும்பத்தை பிரிந்து தனியாக வாழும் தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது.
சாத்தம்மைக்கு கணவர் 3 ஆண்குழந்தைகள் இருந்தாலும் மதுரையில் குடும்பத்துடன் உள்ள மகன்களே கஷ்டப்படும் நிலையில் கணவர் இறப்புக்கு பின்னர் வீட்டை விட்டு வெளியேறி கோவில், தேவாலயங்களில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு கோலமிட்டு பராமரிப்பதை வேலையாக செய்து வருகின்றார் சாத்தம்மை. அங்கு வருவோர் தரும் உணவை சாப்பிடும் அவர், தான் சாகும் வரை எவருக்கும் பாரமில்லாமல் உழைத்து வாழ்வதற்கு அரசு தேவையான உதவிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
தனக்கு தங்குவதற்கு நிலையான வீடு இல்லாததால், ரேசன் அட்டையோ, ஆதார் அட்டையோ தன்னிடம் இல்லை என்றும் அதனால் அரசு அளிக்கும் முதியோர் உதவி தொகைகூட தன்னால் பெற இயலவில்லை என்று தெரிவிக்கும் சாத்தம்மை, தமிழக முதல் அமைச்சர் தனக்கு உதவ வேண்டும் என்று ஆங்கிலத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கோலப்பொடியில் எழுதி உள்ள ஆங்கில எழுத்துக்கள் வாயிலாக தனது வேண்டு கோளை முன்வைத்துள்ள சாத்தம்மை நிச்சயம் தனக்கு இறைவனும் , அரசும் தேவையான உதவியை செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.
Comments