மண்ணில் புதைக்கப்பட்ட லஞ்ச பணம் ரூ.12 லட்சம் கட்டுக்கட்டாக சிக்கியது வசமாக சிக்கிய சார்பதிவாளர்..! 262 முறையற்ற பத்திரங்கள் பறிமுதல்
வேலூர் காட்பாடியில் சார்பதிவாளர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்த 12 லட்சம் ரூபாய் கட்டு கட்டாக சிக்கியது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் காட்பாடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். வியாழக்கிழமை இரவு 7.30 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த திடீர் சோதனையின் போது வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் உள்ளே பணத்தோடு இருந்ததும் அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடியில் பொறுப்பு சார் பதிவாளரான நித்தியானந்தத்துக்கு சொந்தமான ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தில் உள்ள வீட்டில் காலை முதல் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டனர். உரிய ஆவணங்கள் இல்லாத 13 லட்சத்து 97 ஆயிரம் ஆயிரம் ரொக்கப்பணம், 80 சவரன் தங்க நகைகள், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் 12 லட்சம் ரூபாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்கு பின்புறம் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. லஞ்ச பணத்தை வீட்டுக்குள் மறைத்து வைத்தால் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்து மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததாகவும், அண்மையில் யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார் என்ற விவரத்தின் அடிப்படையில் விசாரித்த போது அந்த பணம் சிக்கியதாக கூறப்படுகின்றது. நித்தியானந்தத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் அரசு நிலத்தை பத்திர பதிவு செய்ய முயன்றதாக 262 முறையற்ற பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் லஞ்ச புகாருக்குள்ளான சார்பதிவாளர்களின் வீடுகளில், இது போன்ற அதிரடி சோதனை நடத்தினால் பத்திரபதிவுக்கு புரோக்கர்கள் பகிரங்கமாக லஞ்சம் கேட்கும் அட்டகாசம் ஒழியும் என்கின்றனர் பொதுமக்கள்.
Comments