ஒரு பாக்கெட் 60 ரூபாய் தான்..! அநியாயமா போச்சே 43 உயிர்கள்..! தடையின்றி நடந்த சாராய சப்ளை போலீஸ் கண்டு கொள்ளாதது ஏன் ?

0 1523

40க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கிய விஷசாராய விற்பனைக்கு மூலகாரணமான ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோமுகி நதிக்கரையில் தடையின்றி விற்கப்பட்ட கள்ளசாராய விற்பனையின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

அஞ்சலை அக்கா சரக்கு... விஜயா அக்கா சரக்கு.. என்று சில பெண்களை முன்னிருத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள் பல இடங்களில் தங்கு தடையின்றி பாக்கெட் சாராயம் விற்பனை நடந்ததாக கூறுகிறார் கருணாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர்..!

டாஸ்மாக்கில் மது அருந்த செல்ல வேண்டுமானால் 140 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் 60 ரூபாய்க்கே பாக்கெட் சாராயம் அதிகமாக கிடைப்பதாகவும், கோமுகி ஆற்றங்கரையோரம் தடையின்றி கள்ளச்சாராய விற்பனை நடந்ததாகவும் உள்ளூர் இளைஞர் ஆதங்கம் தெரிவித்தார்

கருணாபுரத்தில் அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்டோர் விஷசாராயம் அருந்தி உயிரிழந்ததாக கதிரவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரின் விஷசாராய உயிரிழப்புக்கு காரணமானதாக சாராய வியாபாரி விஜயா, அவரது கணவர் கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ், தாமோதரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயா - கோவிந்தராஜ் வீட்டிற்குள் ஆய்வு நடத்திய போலீசார் அங்கிருந்து முதற்கட்டமாக 200 லிட்டர் விஷ சாராயத்தையும், ஏராளமான பிளாஸ்டிக் பாக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற மேலும் 7 பேரை கைது செய்த போலீசார் 900 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றி இருப்பதாக தெரிவித்தனர். 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்ட நிலையில், சாராய தயாரிப்புக்காக மெத்தனாலை விஜயாவுக்கு வழங்கிய சின்னதுரை என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்

முழுக்க முழுக்க காவல்துறையினரின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விஷசாராய உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக தெரிவித்த அமைச்சர் எ.வ வேலு , அதனால் தான் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்த 10 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

உள்ளூர் காவல்துறையினருக்கு தெரிந்தே இந்த சாராய விற்பனை நடந்ததாக கிராம வாசிகள் பலரும் குற்றஞ்சாட்டினர்

43 பேர் பலியாகி உள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் , 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்த உறவுகள் கண்ணீர் விட்டு கதறி அழுதது சோகத்தின் வலியை உணர்த்துவதாக இருந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், தனது கண்பார்வை பறிபோய்விட்டதாக வேதனையுடன் தெரிவித்தார்

வருங்காலங்களில் இது போன்ற விபரீத உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்க கள்ள சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments