அடம் பிடித்து வாங்கிய பைக்..! ஹெல்மெட் இன்றி போன ரைடு..! கட்டுப்படுத்த முடியாத வேகத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்!!

0 1254

சென்னை திருவொற்றியூரில் 10-ஆம் வகுப்பு படித்த போது விபத்தில் சிக்கி நீண்ட நாள் சிகிச்சை பெற்று குணமடைந்த மாணவர் ஒருவர், கல்லூரி செல்வதற்காக பெற்றோரிடம் அடம் பிடித்து வாங்கிய விலை உயர்ந்த யமஹா பைக்கில் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்ற போது விபத்துக்குள்ளாகி தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவரின் ஒரே மகன், அப்துல் சாதிக். 3 ஆண்டுகளுக்கு முன் 10-ஆம் வகுப்பு படித்த போது, ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனத்தில் நண்பனை அழைத்துச் சென்ற அப்துல் சாதிக், விபத்துக்குள்ளாகி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நீண்ட நாள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் +2 முடித்து, கல்லூரியில் சேர்ந்த அப்துல் சாதிக், தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக யமஹா எம்.டி.-15 இருசக்கர வாகனத்தை வாங்கித் தருமாறு பெற்றோரிடம் அடம் பிடித்துள்ளார். மகனின் விருப்பத்திற்காக தந்தை அப்துல் மஜீத் 10 நாட்களுக்கு முன் சாதிக்குக்கு யமஹா எம்.டி.-15 பைக் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்னும் பதிவு கூட செய்யாத நிலையில் பைக்கை திங்கள் மாலை அப்துல் சாதிக் ஹெல்மெட் அணியாமல் வெளியே எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

திருவொற்றியூர் - எண்ணூர் விரைவுச் சாலையின் சர்வீஸ் ரோட்டில் அதிவேகமாக பயணித்த சாதிக், சுதந்திரபுரம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், மின் கம்பம் ஒன்றில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார். உயிருக்குப் போராடி கொண்டு இருந்த சாதிக்கை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அப்துல் சாதிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின் படி, 2022-இல் இந்தியாவில் 4,61,312 சாலை விபத்துகளில் 1 லட்சத்து 68 ஆயிரம் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இவற்றுள் 76.6 சதவீத விபத்துகளுக்கு அதி வேகமான பயணமே காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேகம் விவேகமல்ல என்று உணரும் அதே வேளையில், 150, 200 சி.சி. பைக்குகளை ஓட்டும் போது, ஹெல்மெட், ரைடர்ஸ் ஜாக்கெட் எனப்படும் பாதுகாப்பு உடை போன்றவற்றை அணிவதும் கட்டாயம் என்கின்றனர், நிபுணர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments