நடைபாதை மீது கிடந்த குடி போதை இளைஞர்..! மேலே ஏற்றி விட்டு தப்பிய எம்.பி.யின் மகள் கைது!

0 1042

சென்னை பெசன்ட் நகரில் சாலையோர நடைபாதை அருகே மது போதையில் படுத்திருந்த இளைஞர், பி.எம்.டபிள்யூ. கார் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார். அவர் மீது காரை ஏற்றி விட்டு தப்பிச் சென்ற பெண் ஆந்திர எம்.பி. ஒருவரது மகள் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தைச் சேர்ந்தவர், 21 வயதான சூர்யா. பெயின்ட்டரான சூர்யாவுக்கு, 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி வனிதா என்ற மனைவி உள்ளார். திங்கள் நள்ளிரவு வரை சூர்யா வீட்டுக்கு வராததால் அவரை வனிதா தேடிச் சென்ற போது, பெசன்ட் நகர் டைகர் வரதச்சாரி சாலை நடைபாதை ஓரம் சூர்யா மதுபோதையில் படுத்திருந்ததாக கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு சிறிது தூரம் தள்ளி நின்று குடும்பத்தினருக்கு வனிதா செல்போனில் தகவல் கூறிக் கொண்டிருந்த நேரத்தில் டைகர் வரத்தாச்சாரி தெருவில் இருந்து பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று வேகமாக முதல் தெரு நோக்கி திரும்பியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வனிதா ஓடி வருவதற்குள் சூர்யா மீது அந்த கார் ஏறி இறங்கி நின்றது.

கண் முன் கணவர் மீது கார் ஏறியதைப் பார்த்து சூர்யா அலறிய சத்தம் கேட்டு அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து சிலர் வெளியில் வந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் விபத்தை ஏற்படுத்திய பெண் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக வனிதா கூறினார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய பெண்ணும் மது போதையில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். முதலில் காரில் இருந்து இறங்கிப் பார்த்து விட்டு, ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிப்பதாக சொன்ன அப்பெண், மக்கள் கூடுவதைப் பார்த்ததும் காரை எடுத்துக் கொண்டு தப்பியதாக அவர்கள் கூறினர்.

தனது மகன் மீது கார் ஏற்றிய பெண்ணும் பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் தான் என்று கூறிய சூர்யாவின் தாயார், அப் பெண்ணைப் பற்றியும், அவரது காரைப் பற்றியும் அடையாளம் கூறிய பிறகும் போலீசார் கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

விபத்து நடந்த இடத்தின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், பி.எம்.டபிள்யூ. காரை ஓட்டிச் சென்றவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என்று தெரிய வந்துள்ளதாக கூறினர். சென்னை பெசன்ட் நகரில் வசித்துக் கொண்டு புதுச்சேரியில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வரும் பீடா மாதுரி மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உயிரிழப்பை ஏற்படுத்தியது, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்ததாகவும் பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments