பெண்ணை முட்டித்தூக்கி சாலையில் தர தரவென இழுத்துச்சென்ற எருமை..! மாடுகளை பிடிக்க இயலாமல் போராட்டம்

0 778

சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை, எருமை மாடு ஒன்று முட்டித்தூக்கி இழுத்துச்சென்றதால் அந்தப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் படும் துன்பம் குறித்து விவரிக்கின்றது இந்தச்செய்தித்தொகுப்பு...

சாலையில் நடந்து சென்ற பெண்ணை எருமைமாடு முட்டித்தூக்கிய சம்பவத்துக்கு அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆவேசமாக கண்டனம் தெரிவித்த காட்சிகள் தான் இவை..!

சென்னை அம்சா தோட்டம் 2 வது தெருவை சேர்ந்தவர் மதுமதி, 33 வயதான இவர் சம்பவத்தன்று தனது குழந்தைகளை சோம சுந்தரம் நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு விளையாட அனுப்பி வைத்துள்ளார். மதியம் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியாக மிரண்டபடி ஓடிவந்த எருமை மாடு ஒன்று மதுமதியை முட்டித்தூக்கியது

முட்டித்தூக்கிய அந்த எருமையின் கொம்பில் மதுமதியின் கால் சிக்கியதால் அப்படியே சுற்றிய மாடும் அவரை சாலையில் தர தரவென இழுத்துக் கொண்டு தறிகெட்டு ஓடியது. அவரை காப்பாற்ற சிலர் பின் தொடர்ந்து ஓடினர்

அந்த பகுதியில் துணிகளை இஸ்திரி கடை வைத்திருக்கும் சந்திரசேகர் என்பவர் மது மதியை காப்பாற்ற சென்றபோது அவரையும் மாடு முட்டி தூக்கி வீசியது.

படுகாயம் அடைந்த மதுமதியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மதுமதிக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், 50 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலின் பேரில் விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி எருமை மாட்டை பிடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்று புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்தில் அடைத்தனர்.

போலீசார் தங்கள் மீது வழக்கு பதிவு செய்து விடுவார்கள் என்று அஞ்சி ஒருவர் கூட அந்த மாட்டிற்கு உரிமை கொண்டாடவில்லை என்று தெரிவித்த அந்தப்பகுதி பெண் , உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதியில் இறங்கி போராடுவேன் என்றார்

நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றித்திரியும் மாடுகளால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் , வாகன ஓட்டிகளும் கடும் தொல்லைக்கு உள்ளாவதால், மாடுகளை சாலையில் அவிழ்த்து விடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது ஜாமீனில் வெளிவர இயலாத சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments