1001 ரூபாய்க்கு இவ்வளவு வேகம்..? ஆட்டோ ரேஸ்சால் அனாமத்தாக சாலையில் பறிபோன இரு உயிர்கள்..! போக்குவரத்து போலீசார் கவனிப்பார்களா?
சென்னை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அதிகாலையில் நடந்த ஆட்டோரேஸ்ஸின் போது பின் தொடர்ந்த இரு சக்கர வாகனங்கள் ஒன்றோடென்று உரசி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர், 8 பேர் காயம் அடைந்தனர். 1001 ரூபாய் பந்தயத்துக்காக உயிரை பணம் வைத்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
புகையை கக்கிக் கொண்டு ஆட்டோக்கள் சீரிப்பாய... கூடவே பைக்கை திருக்கிக் கொண்டு 30க்கும் மேற்பட்டோர் கண்காணிக்க.. இந்த ரேஸ் நடந்த இடம் சென்னை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை..!
இரவெல்லாம் கண் விழிக்கும் போலீஸ் கண் அயரும் நேரம் பார்த்து, அதிகாலை நேரத்தில் வாரத்திற்கு ஒரு முறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறதாம் இந்த ஆட்டோ ரேஸ்..!
அந்த வகையில் கடந்த 15ந்தேதி அதிகாலையில் அந்த சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு உலைவைக்கும் விதமாக கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட ஆட்டோ ரேஸில் 8 ஆட்டோக்கள் பங்கேற்றதாக கூறப்படுகின்றது. இதனை கண்காணிக்க 30 இரு சக்கர வாகனங்களில் ஆதரவாளர்கள் பின் தொடர்ந்ததாகவும், ரேஸ் ஆட்டோக்கள் 40 கிலோ மீட்டர் தூரம் கடந்து செங்குன்றத்தை நெருங்கிய போது ஆட்டோக்கள் மீது பின்னால் சென்ற ஆதரவாளர்களின் இரு சக்கர வாகனங்கள் உரசியதால் ஒன்றன் பின் ஒன்றாக மோதி தூக்கி வீசப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தில் குன்றத்தூரை சேர்ந்த மணி, அம்பத்தூர் சாம் சுந்தர் ஆகியோர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இருவருமே தலைக்காவசம் அணியவில்லை
மோகன கிருஷ்ணன், மாரிமுத்து, ஜபயேர் உள்ளிட்ட 8 பேர் காயம் அடைந்தனர். முதலில் இரு சக்கார வாகன விபத்து என்று போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது ரேஸ் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் ஆட்டோ ரேசால் இந்த விபரீத விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து ஆட்டோ ரேஸில் ஈடுபட்டவர்களின் பெயர்களை சேகரித்து ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுருத்தி, தங்கள் உயிரை பணயம் வைத்து ஆட்டோ ரேஸில் ஈடுபடும் இவர்களுக்கு கிடைப்பதோ, 1001 ரூபாய் தான் என்று சுட்டிக்காட்டும் போலீசார் , விபரீத ரேஸ்சை தடுக்க ரோந்து பாணியை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
Comments