குவைத் விபத்தில் இறந்த 7 பேரின் உடல்கள் நல்லடக்கம்... கண்ணீர் விட்டு கதறி உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி
50 பேரை பலி கொண்ட குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் அவரவர் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமுவின் உடலைக் கண்டதும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பனின் உடலைக் கண்ட அவரது உறவினர்கள், குடும்பத்தை நல்ல நிலையில் முன்னேற்ற வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டிற்கு சென்றவர் கருகிய நிலையில் திரும்பி இருப்பதாகக் கூறி கதறினர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆதனூரைச் சேர்ந்த ரூனாஃப் ரிச்சர்ட் ராயின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்த உறவினர்கள், சடலமாக திரும்புவார் என்று தெரிந்திருந்தால் வெளிநாட்டுக்குச் செல்லவே அனுமதித்திருக்க மாட்டோம் என்று கூறி அழுதனர்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன், கடலூர் மாவட்டம் முட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை, திருச்சி மாவட்டம் நவல்பட்டை சேர்ந்த ராஜு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகியோரின் உடல்களுக்கும் அவரவர் சொந்த ஊரில் இறுதிமரியாதை செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அஞ்சலி செலுத்தி தமிழக அரசு அறிவித்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
Comments