இதுதான் நாங்குநேரி பஸ் ஸ்டாண்டா ? 3 ஆண்டுகள் கழித்து ஆய்வுக்கு வந்த எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட மக்கள்..! இலவச பஸ்ஸே வேணாம்.. பெண்கள் ஆதங்கம்

0 1030

தேர்தலில் வெற்றி பெற்று 3 ஆண்டுகள் கழித்து நாங்குநேரி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபிமனோகரனை முற்றுகையிட்ட பெண்கள் , தங்களுக்கு போதிய பேருந்துவசதி இல்லை என்று புகார் தெரிவித்தனர்

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன். இவர் வெற்றி பெற்று 3 வருடங்களுக்கு பின்னர் நாங்குநேரி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய தனது ஆதரவாளர்களுடன் சென்றார். பேருந்து நிலைய கழிப்பறை ஏதோ காசா போரில் குண்டு வீசப்பட்ட இடம் போல அலங்கோலமாக காட்சி அளித்தது

இந்த கழிப்பறையை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆவதால் அதன் அருகே கூட எவரும் செல்வதில்லை என்று மக்கள் தெரிவித்தனர். பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் ஒவ்வொருவராக எம்.எல்.ஏ வந்திருக்கும் தகவல் அறிந்து அங்கு கூடினர். நாங்குநேரிக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என்றும் பெரும்பாலான பேருந்துகள் பைபாஸில் சென்று விடுவதாகவும் புகார் தெரிவித்தனர்

நாங்குநேரி என்று சொன்னாலே நெல்லையில் இருந்து புறப்படும் பேருந்தில் இருந்து இறக்கி விட்டு விடுகிறார்கள் என்றும் கூடுதல் பேருந்துகளை நாங்குநேரிக்குள் வந்து செல்ல ஆவண செய்ய வேண்டும் என்று ஒரு பெண் கூறினார். எம்.எல்.ஏவுடன் வந்திருந்தவர், தைரியமாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள் யார் இறக்கி விடுகிரார்கள் பார்ப்போம் என்று குரல் கொடுத்தார்

அப்போது அங்கு வந்த ஒரு பெண் பயணி, குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகள் வராததால் அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு செல்ல இயலவில்லை என்றார், மேலும் ஊருக்கு திரும்பும் போதும் பேருந்துகள் இல்லை, இலவச பேருந்தே வேண்டாம்... ஒழுங்கா நேரத்துக்கு அரசு பஸ்ஸ விடுங்க போதும் என்று ஆதங்கத்தை கொட்டினார்

இதனை எல்லாம் கேட்டு தலையாட்டியபடியே நின்று கொண்டிருந்த எம்.எல்.ஏ ரூபி மனோகரன், இப்ப நேராக.. போக்குவரத்துறை அதிகாரியை சந்திக்க தான் போயிட்டு இருக்கேன்... உங்க பிரச்சனையை சரி செய்து விடுகிறேன் ..என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments